நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 20-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், காந்திமதி அம்பாள் பவனி அம்பாளாகவும் சப்பரத்தில் பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.
21-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார்.