ஶ்ரீரங்கம் பகல் பத்து -எட்டாம் திருநாள்

அரங்கனின் பகல் பத்து 8 ம் திருநாள் (விவரமும்)….
அரையர்களின் சேவையும் …

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 8 ம் திருநாளில் (18-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,
மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து,கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,
துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,

அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில்
(அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,
அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.
ஸ்ரீ வைகுண்டத்தில், எம்பெருமான் எவ்வாறு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,முமுக்ஷுக்கள்,நித்யசூரிகள் புடைசூழ,
நாலாயிர திவ்ய பிரபந்தத்தினை கேட்டு மகிழ்வானோ,
அவ்வாறே, பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும்,
இந்த பகல்பத்து விழா நடைபெறும் அர்ஜுனமண்டபத்தில், அரங்கனும் வீற்றிருப்பார்…

இன்றும் இரண்டு அரையர் சேவைகள் நடைபெறும்.”பெரிய திருமொழியில்” “பண்டை நான்மறை” பதிகம் தொடங்கி,
“சிலையிலங்கு பொன்னாழி” பதிகம் ஈறாக,250 பாசுரங்கள் சேவிக்கபடும்…

8 ம் திருநாளின் முதல் அரையர் சேவை….

“பண்டை நான்மறை” பதிகத்திற்கு அபிநய வியாக்கியானங்கள் ஆகி, “ஆராமம் சூழ்ந்த அரங்கம்” அணி பொழில் சூழ்ந்த அரங்கம்”
என்று திவ்ய பிரபந்தத்தில்,அரங்கமென்று முடியும், வாக்கியங்கள் 64 சேவிக்கப்படும்.

“அரங்கமாநகர் அமர்ந்தானே” என்ற வாக்கியத்திற்கு மட்டும்,அநேகம் தடவை அபிநயம் நடைபெறும்.

“மாயிருங்குன்ற மொன்று மத்தாக” என்ற “திருப்பாற்கடல்” கடைந்த நிகழ்ச்சியை,இந்தப் பாசுரச் சொற்றொடர் நினைவூட்டுவதால்,இந்த இடத்தில் “அம்ருத மதனத்தை” நடிப்பதற்க்காகவே,அத்திருமொழி பாட்டுகளை நிறுத்தி,
மற்றைத் திருமொழிப் பாசுரங்களை சேவிப்பார்கள்.

8 ம் திருநாளின் இரண்டாம் அரையர் சேவை….

தம்பிரானடி சேவித்து,”அம்ருத மதனத்தை” நடித்து,அத்திருமொழியில் நிறுத்திய பாசுரங்களை
அரையர்கள் சேவிப்பார்கள்.

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டு
மகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.
நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்….

 

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு