ராமானுஜர் சந்நிதியில் திகழும் சடாரிக்கு என்ன பெயர்?

உடையவர் ஸந்நிதியில் “முதலியாண்டான்” எதைக் குறிக்கும்?
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரப்பண்டிதராய்த் திகழ்ந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை யெல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை அருளிச் செய்திட அதனால் மகிழ்வுற்ற இராமானுசர் தம்முடைய திருவாராதனப்பெருமாளான “பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக்கொண்டிரும்” என்று நியமித்தருளினார்.
கிடாம்பியாச்சானும், கிடாம்பிப்பெருமாளும் திருமடைப் பள்ளி கைங்கர்யத்திற்கு கடவராய் இருப்பர்கள். வடுகநம்பி, பசுக்களுக்கு புல் இடுவதற்கும், உடையவருக்கு எண்ணெய்க் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது ஸமர்ப்பிப்பதற்கும் கடவர்.

திருமண்காப்பு சாற்றிக்கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப்பெருமாள் எம்பெருமா னார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது அவருக்கு அந்த கைங்கர்யத்தில் முதலியாண்டான் உதவி செய்திடுவார். எம்பெருமானார் திரு வீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக முதலியாண்டான்அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.

இந்தக் காரணம் பற்றியே உடையவரது திருவடிநிலை களுக்கு முதலியாண்டான் என்ற பெயர் நிலை கொண்டுள்ளது. இக்காரணத்தாலேயே எம்பெருமானார் ஸந்நிதியில் ஸ்ரீசடாரிக்கு ‘முதலியாண்டான்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது