தேவியுடன் மணக்கோலத்தில் அனுமன்!

anjineyarமணக்கோலத்தில் மனைவியுடன் கூடிய ஆஞ்சநேயரா ஆச்சரியம்தான். அனுமன் பிரம்மச்சாரியாயிற்றே! எப்படி மணக்கோலத்தில் காட்சி தருமாறு இருக்கலாம் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் பலருக்கும் மனதில் இருக்கும். அனுமனின் மணக்கோல தரிசனம் வடக்கே சில தலங்களில் காணலாம். ஆந்திரப் பிரதேசத்தில், சுவர்ச்சலா அனுமந்தஸ்வாமி திருக்கல்யாணமும் சில இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. மகரிஷி வியாசரின் தந்தை பராசர மகரிஷி தமது பராசர சம்ஹிதையில் அனுமானின் கதையைக் கூறியுள்ளாராம். அதில், சூரியனின் மகளான சுவர்ச்சலையை தன் மாணவனுக்கு சூரியன் மணம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டுள்ளதாம். ஜ்யேஷ்ட சுத்த தசமியில் இந்தத் திருமணம் நடந்ததாகக் குறிப்பு உள்ளது என்று கூறுகின்றனர். ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர். நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம். நிருத்த, பால, பக்த, வீர, யோக, சிவபிரதிஷ்டா, சஞ்சீவி, கல்யாண, பஞ்சமுக என அனுமனின் நவ வடிவங்கள் போற்றப்படுகின்றன. இதனை, ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிம்சதிபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீஅஷ்டாதசபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயர், ஸ்ரீசதுர்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீதுவாத்ரிம்சத்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீவானராகார ஆஞ்சநேயர் எனவும் நவ வடிவங்களாகத் துதித்துப் போற்றுகின்றனர். அந்த நவ மாருதி வடிவங்களுள் கல்யாண ஆஞ்சநேயரான சுவர்ச்சலா ஆஞ்சநேய வடிவம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது, மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.