
வள்ளிமலையில் இருந்து குறவள்ளியை அழைத்துக் கொண்டு திருத்தணிகை சென்ற முருகப் பெருமான், வழியில் ஒரு குன்றைக் கண்டார்! இருவரும் அங்கே தங்கி இளைப்பாறிய பின் திருத்தணிக்கு தொடர்ந்து சென்றார்கள்! அந்தக் குன்றே ஞானமலை. இங்கே மலை மீது முருகனின் திருவடிகள் பதிந்த இடம் என்று, பாதச் சுவடுகள் உள்ளன. இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சம தொலைவில் முக்கோண வடிவில் அமைந்துள்ளன.
அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டியருளிய தலமும் ஞானமலையே! இம்முருகனைப் போற்றி அவர் பாடிய திருப்புகழில்,
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரிஅபி ராமி அருள்பாலா
நாரண சுவாமி ஈனுமக ளோடு
ஞானமலை மேவு பெருமாளே – என்றார்.
வேலூர்- காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் வரும் மங்கலம் எனும் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஞானமலை.
அடிவாரத்தில் ஞானஸித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. மலைக்குச் செல்ல படிக்கட்டுகள் மற்றும் நிழற்கூரைகள் ஆகியன உள்ளன. வழியில் வெப்பாலை, குடசப்பாலை மரங்கள். இங்கே, ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பேரழகுடன் காட்சி தருகிறார். ஞானமலை முருகனின் திருமுகம் ஞானக்களையுடன் திகழும் அழகே அழகு! இதனை பிரம்ம சாஸ்தா வடிவம் என்கின்றனர்!

பல்லவர்கள் எழுப்பிய ஆலயங்களில், பெரும்பாலும் முருகப் பெருமான், பிரம்ம சாஸ்தா வடிவில்தான் இருப்பாராம்! ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் கொண்டு, முன் கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்று இடுப்பில் வைத்தபடியும் காட்சி தருகிறார்! உற்ஸவர், கோலக் குறமகள் தழுவிய ஞானக் குமரனாக, வள்ளியைத் தன் மடியில் இருத்தி, அணைத்தபடி காட்சி தருகிறார்.
மலையின் இடப்புறம், ஒரு சுனை. 14-ஆம் நூற்றாண்டில் காளிங்கராயன் என்பவன், ஞானமலை கோயிலுக்கு படிகள் அமைத்த செய்தியைச் சொல்கிறது கல்வெட்டு ஒன்று!
முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், அங்கே சிவபெருமான் சந்நிதி. இவரை ‘ஞானகிரீஸ்வரர்’ என்கின்றனர். இந்த சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்களாக இரண்டு உள்ளன. அதை சிறு மண்டபம் போல் கட்டியுள்ளனர்.
ஞானமலை முருகன் கோயிலுக்குச் செல்ல படிகள் கட்டி, இருபுறமும் கைப்பிடிச் சுவர்கள் அமைத்து, பம்பு செட் மூலம் மலைமீது நீரேற்றும் வசதி செய்திருக்கிறார்கள், ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ அமைப்பினர். மேலும், உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் துணையுடன், இங்கே உற்ஸவங்களும் சிறப்புற நடைபெறுகிறது.
கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான விழாக்கள் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. அருணகிரிநாதருக்கு முருகன் தரிசனம் தந்த விழா, கார்த்திகை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடக்கிறது. கல்வி கேள்விகளில் சிறக்க பிரம்மசாஸ்தா வடிவமாகத் திகழும் ஞானமலை முருகனை தரிசிப்போம்!
- செங்கோட்டை ஸ்ரீராம்