October 20, 2021, 5:30 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை!

  திருநெல்வேலி மாவட்டத்தில் மலை வளம் மிகுந்த இயற்கை எழில் கொண்ட மிக அழகான பகுதி செங்கோட்டை பகுதி. முற்காலத்தில் கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியுடன் இருந்து, பின்னாளில் அதாவது 1956ல் தமிழகத்துடன் இணைந்த பகுதி இது. அந்த மலை வளத்தின் அழகை இப்போதும் நாம் கண்டு களிக்கலாம்.

  மலை முகடுகளுடன் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து ஆரியங்காவு, புளியறை கடந்து கீழே சமவெளிப் பகுதிக்கு இறங்கியதும், சின்னச் சின்ன குன்றுகள் அமைந்திருப்பதைக் காணலாம். செங்கோட்டை பகுதிக்குள் நுழையும் போது இரு மலைப் பாங்கான மேடுகளுக்கு நடுவேதான் செங்கோட்டை ரயில் நிலையம் அமைந்திருக்கிறது.

  சொல்லப் போனால் இது செங்கோட்டை நகரின் வடமேற்கு எல்லை. ரயில் நிலையத்தை ஒட்டிய இந்த வடமேற்கு எல்லையைக் காத்துவரும் அம்மனாகத் திகழ்கிறாள் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன்.

  இது செங்கோட்டை என்று வழங்கப்பட்டாலும், முற்காலத்தில் இவ்வூரின் பெயர் சிவன் கோட்டை என்று இருந்ததாம். சிவன்கோட்டையே மருவி செங்கோட்டை ஆனதென்பர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதி என்பதால், செங்கோட்டை நகரின் தென்கிழக்குப் பகுதியில் பார்டர் இன்றும் உள்ளது. அதில் இருந்து நகருக்குள் புகும் போது வரவேற்பு வளைவு ஒன்று உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை பதிக்கப் பெற்றுள்ள அந்த வரவேற்பு வளைவுக்கு இரு புறமும், ஆலயங்களில் இறை சந்நிதியில் முன் புறம் திகழும் துவாரபாலர்களைப் போல் இரு துவாரபாலர்கள் ஒற்றை விரல் காட்டி நின்ற நிலையில் அமைந்திருக்கின்றனர். இந்த ஊரே ஒரு சிவன் சந்நிதியைப் போல், சிவன் கோட்டையாகிய பெரிய சந்நிதியின் முன்னே திகழும் துவார பாலர்களைப் போல் திகழ்வது சிறப்பு. அதுபோல், சந்நிதி முன்னே இருக்கும் விநாயகரைப் போல், இங்கே குண்டாற்று விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார்.

  இங்கே எல்லையில் ஒவ்வொரு திசையிலும் ஊர்க் காவல் தெய்வங்களாக அம்பிகை சந்நிதிகள் விளங்குகின்றன. செங்கோட்டை நகருக்கு தென்கிழக்குப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற நித்யகல்யாணி அம்மன் கோயில் கொண்டிருக்கிறார். மேற்கில் வண்டிமறிச்சி அம்மன் கோயில் கொண்டிருக்கிறார். மேலும் காளி அம்மன், வடக்குத்தி அம்மன், முத்துமாரி அம்மன்,

  இப்படி செங்கோட்டை நகரின் வடமேற்கு எல்லையில் கோயில் கொண்டிருக்கும் இந்த வனதுர்கை ஆலயம் வந்த கதையும் சுவாரஸ்யமானதுதான்.

  செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் சாலையில், ரயில் நிலைய கேட் கடந்ததும் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. கோயிலை ஒட்டி கலங்காதகண்டி செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்று இடப்புறம் திரும்பினால், செங்கோட்டை ரயில் நிலையத்தின் மறு பகுதி. ரயில் நிலைய ஊழியர்களுக்குக் கட்டி வைத்துள்ள குடியிருப்பு கடந்து சென்றதும் சற்றே மேடான பகுதியில் திகழ்கிறது வனதுர்க்கை அம்மன் கோவில்! இதன் அருகே சிறு மலை ஒன்று உள்ளது. அதன் மீது சிறிய லிங்கம் உள்ளது. சிவராத்திரி தினத்தில் இங்கே கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் சென்று வழிபடுகிறார்கள்.  அந்த மலைக்கு நேர் கீழே ஒரு மேடான பகுதியில் இந்த வனதுர்கை அம்மன் சந்நிதி அமையப் பெற்றுள்ளது.

  கரடுமுரடாக இருந்த காட்டுப் பகுதி அது. உயர்ந்தமலை முகடு போல் மேடான பகுதி. அப்படி ஒன்றும் பெரிய மலை இல்லை. குன்றுப் பகுதி என்பதால், ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்கள். மக்கள் அதிகம் புழங்காத மிகச் சிறிய கிராமப் பகுதி. ரயில் நிலையம் அருகே இருந்ததால், ரயில் நிலையப் பணியாளர்கள், அதிகாரிகள் என சிலர் தங்குவதற்கான குடியிருப்பு அங்கே இருந்தது.

  இந்த துர்க்கை அம்மன் இங்கே வனதுர்க்கையாக வணங்கப் பட்டிருக்கிறாள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே அம்மனின் அதிதீவிர பக்தராக இருந்த ஆறுமுகம் கரையாளரின் துணைவியார், தம் சிறு வயதில் அம்மனின் சிறிய கற்சிலையைக்  கண்டெடுத்திருக்கிறார். அதனைத் தம் வீட்டின் அருகே வைத்துவிட்டு இரவு உறங்கியபோது, அவர் கனவில் அம்பிகை தோன்றி தான் இங்கே கோயில் கொள்ள விரும்புவதாகவும், தன்னை வழிபடுமாறும், தன்னை வந்து வழிபடும் அன்பர்க்கு வேண்டும் வரம் தருவதாகவும் கூற, மறு நாள் காலை எழுந்ததும் அந்த விக்ரஹத்தை பயபக்தியுடன் எடுத்து வந்து, சிறிய ஓலைக் குடிசையில் வைத்து அங்குள்ள பெண்களுடன் சேர்ந்து வழிபடத் தொடங்கியுள்ளார்.

  நாளாக நாளாக, அந்தக் காலனியில் இருப்போரின் குலதெய்வமாகவே அம்பிகை மாறிப் போனாள். வந்து வணங்கியோர் இன்னல் தீர்ந்து, தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையப் பெற்ற நிலையில், வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் விளக்கு ஏற்றி அம்மனை வழிபடத் தொடங்கினர். 1977ல் ஓட்டுக் குடிசையாக சிறு கோயில் கட்டப்பட்டது. ஆறுமுகம் கரையாளர் அமைத்த ஆலயம். அதிகம் மக்கள் புழங்காத பகுதி என்பதால், வாரம் இரு தினங்களில் மட்டுமே மக்கள் வந்து வணங்கிச் சென்றனர்.

  மாங்கல்ய வரம் வேண்டி நின்ற பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்தது. குழந்தைச் செல்வம் வேண்டிச் சென்ற பெண்களுக்கு வீட்டில் தொட்டில் கட்டி ஆட்டும் பாக்கியமும் நிறைந்தது. ஒரு நாள் இந்த விக்ரகத்தில் சிறு பின்னம் ஏற்பட, வேறு புதிய விக்ரகம் அமைத்து ஆலயத்தைப் பெரிதாக்க எண்ணினார் ஆறுமுகத்தின் மகன் ஆ.முருகேசன். அதன்படி பின்னாளில் புதிதாக ஒரு விக்ரஹம் செய்யப்பட்டு பிரதிஷ்டை ஆனது. ஆனாலும் பழைய விக்ரஹத்தை அகற்ற விரும்பாத ஆறுமுகம் தம் மகனிடம் பழைய விக்ரஹத்தையும் இந்தப் புதிய வனதுர்க்கை அம்மனின் பின்னே பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படியே இப்போது சந்நிதி அமையப் பெற்றுள்ளது.

  vanadurga ambikai - 1

  சுற்றுச் சுவர் ஏதும் இல்லை. பரந்து விரிந்த பரப்பு. முன்னே ஆலயத்தின் முகப்பு தெரிகிறது. வலம் வந்தால் விநாயகப் பெருமான், சிவபெருமான் ஆகியோரின் சந்நிதிகளை வணங்குகிறோம். பின்னே நாகர்களுக்கு ஒரு சந்நிதி. வலம் வந்தால் இடப்புறத்தில் வீரபத்திரர், ராகு கேது என இறையுருவங்கள் அமையப் பெற்றிருக்கின்றன.

  vanadurga ambikai2 - 2

  உள்ளே கருவறையில் அம்பிகை வனதுர்க்கை தனியாகத் திகழ்கிறாள். மகிஷனின் சிரத்தின் மீது நின்ற கோலத்தில் திகழும் அம்பிகை இரு கரங்களில் ஆயுதங்களையும் மற்ற இரு கரங்களில் அபய வரத முத்திரையும் காட்டி திகழ்கிறாள்.

  அக்கம் பக்கத்தில் உள்ளோரும் இங்கே வந்து அம்மனை செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் வணங்கி வருகின்றனர். அவர்கள் விரும்பியது நடந்து வாழ்வில் மன நிம்மதி பெறுகின்றனர். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விஷேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இலத்தூரில் இருந்து காளி உபாசகர் காளிராஜன் (9843710327) வந்து பூஜை செய்கிறார்.

  மேலும் தகவலுக்கு: ஆ. முருகேசன் (நிர்வாகி) 9750445881

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-