
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
(எளிய உரையுடன்)
திருப்பாவைத் தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்
திருப்பாவை-2; வையத்து வாழ்வீர்காள்! (பாடலும் உரையும்!)
** ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் (3)
பொருள்
வாமன அவதாரத்தின்போது எம்பெருமான், ஆகாயம் அளவு வளர்ந்து மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்தான். அந்தப் புருஷோத்தமனுடைய நாமத்தைப் போற்றி நாங்கள் இந்தப் பாவை நோன்பை மேற்கொண்டுள்ளோம். இந்த நோன்பின் பயனாக, தீய சக்திகளால் ஏற்படும் விளைவுகள் தொலையும்; மாதம் மூன்று தடவை மழை பெய்யும்; அதனால் பயிர்கள் செழித்து வளரும்; பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும்; அங்குள்ள குவளை மலர்களில் வண்டுகள் நிம்மதியாகத் துயில்கொள்ளும்; பசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும், குடம் நிறையப் பால் சுரக்கும்; சமுதாயம் செழிப்படையும்; மாந்தர்தம் மனங்களில் இறைநாட்டம் ஏற்படும்.
அருஞ்சொற்பொருள்
பேர் – நாமம்
பாவைக்குச் சாற்றி நீராடினால் – பாவை விரதம் அனுஷ்டிப்பதால்
ஓங்கு பெரும் செந்நெல் – செழிப்பாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த நெற்பயிர்
ஊடு – ஊடே, இடையே
உகள – துள்ளித் திரிய
போது – மலர்
பூங்குவளைப் போது – மென்மையான குவளை மலர்
படுப்ப – உறங்க
புக்கு – புகுந்து
இருந்து – ஒருநிலையாக இருந்து
தேங்காதே புக்கு இருந்து – (கோபாலர்கள்) சலியாமல்
(பால்) கறக்கப் புகுந்து ஒருநிலையாக (அமர்ந்து) இருந்து
சீர்த்த முலை – (மடி நிறையப் பால் இருப்பதால்) பருத்து நிற்கும் காம்புகள்
சீர்த்த முலை பற்றி வாங்க – பசுக்களின் காம்புகளைப் பிடித்துப் பால் கறக்க
திங்கள் மும்மாரி பெய்யும் என்பதை ‘மாதா மாதம் மூன்று தடவை மழை பெய்யும்’ என்று கொள்ளாமல் ‘உரிய கால இடைவெளியில் மழை பெய்யும்’ என்று கொள்வதே பொருத்தமானது.
மொழி அழகு
நாட்டின் செழுமைக்காக நோன்பு மேற்கொண்டுள்ளோம் என்பதைத் தெரிவிப்பதற்கு ஓங்கு பெரும் செந்நெல் முதலானவற்றைக் குறிப்பிடும்போது ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்ற பகவந் நாமத்தைப் பயன்படுத்தி இருப்பது.
***
ஓங்கு பெரும் செந்நெல், ஊடு கயல் உகள, பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப, வள்ளல் பெரும்பசுக்கள் முதலான வார்த்தைப் பிரயோகங்கள் சிறப்பாக அனுபவிக்கத் தக்கவை.

ஆன்மிகம், தத்துவம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து என்று ஆசி கூறுகிறது வேதம். இந்தப் பாடலின் கருத்தும் அதுதான். சுகமாக வாழ செல்வம் அவசியம். செல்வம், உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி மழையைச் சார்ந்தது.
***
திருப்பாவையில் பல்வேறு நாமாக்கள் உள்ளன. பாவை நோன்பு என்பதே பகவானின் நாமங்களைச் சொல்வது என்று ஆண்டாள் சொல்கிறாள். தாய்க்குத் தீங்கு விளைவித்தவன் கூட, தனக்கு ஏதாவது வலி நேரிடும்போது, ‘அம்மா’ என்றுதான் அரற்றுகிறான். அதுபோலவே, பகவானே இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களுக்குக் கூட பகவந் நாமாக்களைச் சொல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பது வைணவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.
***
ஓங்கி உலகளந்த உத்தமன் என்பதன் மூலம் பரமபுருஷனின் ஸர்வ வியாபகத் தன்மை குறித்த வேத வரிகளை நினைவூட்டுகிறாள். பகவான் இந்தப் படைப்புக்கு உள்ளே நீக்கமற நிறைந்திருப்பதோடு நில்லாமல் வெளியேயும் நிற்பவன் என்பது வேதவாக்கு.
***
பாவை நோன்பின் பயனாக நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்று கூறுகிறாள் ஆண்டாள். இதை நாம், ”திருப்பாவை ஓதுவதால் நாட்டில் செழுமை ஏற்படும்” என்று அவள் நமக்கு வரம் தருவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். (வங்கக் கடல் கடைந்த பாசுரத்திலும் இத்தகைய வரத்தை ஆண்டாள் நமக்கு அருள்கிறாள்.)
***
தீங்கின்றி என்பதை ‘தீமை விலகும்’ என்று கொள்ளலாம். ‘தீங்கின்றி மாரி பெய்யும்’ என்றும் கொள்ளலாம். மழை என்பது ஜீவாதாரமானது. மழை இல்லாவிட்டால் எந்த ஜீவனும் உயிர்வாழ முடியாது. அதேநேரத்தில், மழை அதிகமாகப் பெய்தாலும் தீங்குதான். எனவே, உரிய இடைவெளிகளில் மழை பெய்ய வேண்டும்.
***
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள என்பதை நாம் தற்காலத்தில் கற்பனையில் மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால், சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு வரை இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிதர்சனமாக இருந்தது. காரணம், இந்தியாவின் வாழ்க்கை முறை விவசாயம் சார்ந்தது. விவசாயம் நீராதாரம் சார்ந்தது. நீர் மேலாண்மையில் நமது தேசம் பன்னெடுங்காலமாகவே விசேஷ அக்கறை காட்டி வந்துள்ளது. கண்மாய்கள், ஊருணிகள், ஏரிகள் முதலிய நீர்த்தேக்கங்களில் நீர் சேமிக்கப்படும். நிலத்தடி நீருக்குப் பஞ்சமே இராது. இதுபோன்ற காரணங்களால் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் உபரியாகப் பெருக்கெடுக்கும். கண்மாய்ப் பாசனம், கிணற்றில் இருந்து தானாகவே பெருக்கெடுக்கும் நீர் பாத்திகளில் பாய்வது முதலிய காரணங்களால் வயற்காடுகளில் பாயும் நீரில் நிறைய மீன்கள் காணப்படும்.

***
குடம் நிறைக்கும் பெரும் பசுக்களின் வள்ளல் தன்மை, வையத்து வாழ்வீர்காள் பாசுரத்தில் வரும் ஆந்தனையும் (ஏற்பவரின் தேவை நிறைவடையும் வரை) என்ற பதத்தை நினைவூட்டுகிறது.
பெரும் பசுக்கள் என்பது பசுக்களின் உடல்நலத்தையும் வளர்ச்சியையும் குறிக்கிறது.
***
பூமியில் என்னதான் செழிப்பு இருந்தாலும் அதெல்லாம் மரணத்தின் போது நம்முடன் வரப்போவதில்லை. மரணத்துக்குப் பின்னர் மீண்டும் பிறப்புதான். எனவே, உண்மையான செல்வம் என்பது பகவானின் திருவடிகளைச் சரணடைவது மட்டுமே. இதுதான் பரமானந்தம். இது நிரந்தரமானது. மனித வாழ்வின் நோக்கமும் இதுவே. எனவே, இதுதான் நீங்காத செல்வம். உபநிஷத்துகள் கூறும் சிரேயஸ் என்பதும் இதுவே.