சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
63. உண்மையான ரத்தினங்கள்!
ஸ்லோகம்:
ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்|
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசஜ்ஞா விதீயதே||
– சாணக்யநீதி.
பொருள்:
இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, நற்சொற்கள். ஆனால் மூடர்கள் கற்களையே ரத்தினங்கள் என்கிறார்கள். ஏனோ?
விளக்கம்:
ஒளிரும் பொருட்களை மட்டும் மதிப்பு மிக்கவையாக எண்ணுவது தவறு. உண்மையில் மதிப்பு மிகுந்த பொருட்கள் எவை? கற்களை விட மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் யாவை? என்ற கேள்விக்கு பளீரென்று விளக்கம் அளிக்கும் ஸ்லோகம் இது.
“தான்யானாம் ஸங்ரஹூ ராஜன்னுத்தம: சர்வசங்ரஹாத்”
— ஓ அரசனே! பிற பொருட்கள் அனைத்தையும் விட உணவுப் பொருட்களை சேகரிப்பது உயர்ந்தது.
“நிக்ஷிப்தம் ஹி முகே ரத்னம் ந குர்யாத் ப்ராணதாரணம்”
— ஏனென்றால் பசி எடுக்கும்போது எத்தனை மதிப்பு மிகுந்த ரத்தினம் ஆனாலும் வாயில் இட்டுக்கொண்டால் உயிரை காப்பாற்றுமா?
ரத்தினங்கள் பசி, தாகத்தைத் தீர்க்க மாட்டா என்ற பொருளில் இந்த ஸ்லோகம் ஹிதோபதேச நூலில் உள்ளது.
பணத்திற்கும் ரத்தினங்களுக்கும் மதிப்பு என்ன என்பது அனுபவத்திற்கு வரும் போது புரியும். ரயில் விபத்தில் சிக்கியபோது… பசி எடுக்கும்போது… பை நிறைய பணம் இருந்தும் உண்பதற்கு ஏதும் கிடைக்காவிட்டால்… வெள்ளத்தில் சிக்கிய போது தாகம் தீர்க்க ஒரு வாய் நீர் இல்லாத போது… அவற்றின் மதிப்பு புரியும். அதனால் நீரும் உணவுமே உண்மையான ரத்தினங்கள்.
அடுத்து மூன்றாவது ரத்தினம் சுபாஷிதம். நீரையும் உணவையும் அடுத்து உயிரை காப்பது நல்ல சொற்களே! வழிதவறிய மனிதனை நல்வழிப்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் அளித்து உயர்ந்தவனாக்குகிறது.
ஆபத்திலோ, அவசியமானபோதோ நண்பன் கூறும் நற்சொற்கள் நம் வாழ்க்கையே மாற்றக்கூடியது. அதனால் நீர், உணவு, சுபாஷிதம் இம்மூன்றுமே உண்மையான ரத்தினங்கள்!