
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்
சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (3)
பொருள்
சூரியனின் ஒளிபொருந்திய கிரணங்கள் எட்டுத் திக்கும் பரவி விட்டன. விண்ணில் மேவிப் படர்ந்திருந்த விண்மீன்களின் பிரகாசமான ஒளி குன்றியது. ஆகாயம் முழுவதும் பரவி இருந்த நிலவின் குளிர்ச்சியான ஒளி மங்கிவிட்டது. வானத்தைப் போர்த்தி இருந்த இருள் விலகியது. பசுஞ்சோலைகளில் வளர்ந்திருக்கும் பாக்கு மரங்களின் பாளைகள் பிரிந்ததால் மென்மையான சுகந்தம் பிறந்தது. காலை நேரத்துக் காற்று அந்த நறுமணத்தைத் தாங்கி அனைத்துப் பகுதிகளிலும் மென்மையாக வீசுகிறது. அழகிய பெருத்த திருக்கரத்தில் ஒளிவீசும் சுதர்சனத்தைத் தாங்கியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!
அருஞ்சொற்பொருள்
துன்னிய – மேவி நிற்கிற, படர்ந்த
மின்னொளி – மின்னல் போன்ற பிரகாசமான ஒளி
பசுத்தனன் – ஒளிகுன்றிப் போனான்
பனிமதி – குளிர்ச்சியான நிலவு
இவனோ – இந்த
பாயிருள் – பாய்ந்து, விரிந்து செல்கிற இருள்
கமுகு – பாக்கு
மடல் – மூடிய வெளிப்பகுதி
வண்பாளை – அழகான, வலிமையான பாக்கு மட்டைகள்
நாற – மணக்க
கூர்ந்தது – வீசியது
மாருதம் – காற்று
இதுவோ – இந்த
அடல் – போர், வெற்றி
அம் – அழகிய
திகிரி – சக்ராயுதம்
தடக்கை – வலிமையான பெரிய கை
மொழி அழகு
இரவில் இருள் படர்ந்து இருப்பது, ஆகாயம் முழுவதும் தாரகைகள் மேவி இருப்பது, நிலவின் ஒளி விரிந்து பரவி இருப்பது, படர்ந்த சோலைகள், பாளைகள் விரிதல், திசையெங்கும் கதிரொளி பரவுதல், மென்மையாக வீசும் காற்றில் சுகந்தம் விரவிப் பரவி இருப்பது – இங்கே, விரிதல், படர்தல், பரவுதல் என்பதைச் சொல்லும் விதத்தில் உள்ள நயம் கவனிக்கத் தக்கது.