நான்காவது போட்டியிலும் வென்று இலங்கையை திணறடித்த இந்திய அணி

Published:

இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் சதங்களின் உதவியுடன் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஏற்கெனவே 3 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களம் இறங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்குக்கு உகந்த சூழல் நிலவுவதால் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தவான் (4 ரன்), வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். 2-வது ஓவரிலேயே களத்திற்குள் நுழைந்த கேப்டன் விராட் கோலி, இலங்கையின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். பெர்னாண்டோவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார்.

ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததால் ரோகித் சர்மாவும் கோலியும் அடித்து ஆடினர். கோலி-ரோகித் சர்மாவின் பேட்டிங்கால் இந்திய அணி 26வது ஓவரில் 200 ரன்களை தொட்டது. அணியின் ஸ்கோர் 225 ரன்களாக (29.3 ஓவர்) இருந்த போது விராட் கோலி (131 ரன், 96 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) மலிங்காவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கோலி-ரோகித் ஜோடி கூட்டாக 219 ரன்கள் சேர்த்தது. ஒரு நாள் போட்டியில் இலங்கை மண்ணில் 2-வது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஜோடி என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.
பின்னர் ஹர்திக் பாண்ட்யாவும் (19 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் சர்மாவும் (104 ரன், 88 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) மேத்யூசின் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த லோகேஷ் ராகுலும் (7 ரன்) நிலைக்கவில்லை. 49 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்டுகள் விழுந்ததால், அது இந்தியாவின் ரன்வேகத்தைக் குறைத்தது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

பின்னர் டோனியும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்தனர். டோனிக்கு இது 300-வது ஒரு நாள் போட்டி என்பதால், அதிரடியாக விளையாடி 350 ரன்களை கடக்க உதவினார். பாண்டே, டோனி ஆகியோரில் யார் அரைசதத்தை எட்டுவது என்பதில் போட்டி நிலவியது. 4 பந்து எஞ்சி இருந்த போது டோனியின் அரைசதத்திற்கு ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி 4 பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற மனிஷ் பாண்டே 4 ரன்கள் எடுத்து தனது அரைசதத்தை எட்டினார்.

இறுதியாக 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. இலங்கை மண்ணில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு இதே மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 363 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img