இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் ஆட்டம் – இது இங்கிலாந்து அணியின் நாள்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –
இரண்டாம் நாள் (26.08.2021) ஆட்டத்தை இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 120 ரன் என்ற கணக்கோடு தொடங்கியது. ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் விளையாடி, எட்டு விக்கட் இழப்பிற்கு 403 ரன்கள் சேர்த்துள்ளது.
அதாவது இன்று ஒருநாளில் 303 ரன்கள். ஒரு நாளில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது மிகச்சிறந்த ஆட்டம். எனவே இங்கிலாந்து மிகச்சிறந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.
இப்போதே இங்கிலாந்து அணியினர் இந்திய அணியை விட 345 ரன்கள் அதிகம் எடுத்து இருக்கிறார்கள். நாளை ஆட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை விளையாடி இன்னும் ஒரு 55 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணிக்கு ஒரு மனோபலம் கிடைக்கும்.
இந்திய அணியை 400 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை அளிக்க முயற்சி செய்வார்கள். இந்திய பேட்ஸ்மென்கள் நாளை, மூன்றாம் நாளும், நான்காம் நாளும் ஆடி, ஐந்தாம் நாளிலும் பாதி நாள் ஆடினால் இந்தியாவிற்கு வெற்றி அல்லது கௌரவமான ட்ரா அல்லது தோல்வி கிடைக்கலாம்.
ரோஹித் ஷர்மா, கே. ஏல். ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, பந்த் ஆகியோரில் இருவர் செஞ்சுரி போடவேண்டும்; பாக்கியுள்ளோர் 50ஐத் தாண்டவேண்டும். செய்வார்களா?
இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டின் ஆறாவது சதம் இது. இந்த ஆண்டில் 228, 186, 218, 109, 180, இந்த இன்னிங்க்ஸில் 121 என ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் ஆறு சதங்கள் என்பது இங்கிலாந்து வீரர்களின் முந்தைய சாதனைய அவர் சமன் செய்திருக்கிறார்.
இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. அவர் மேலும் சதங்கள் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட் விளையாட்டில் உண்மையிலேயே சிறந்த அணியா? இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.