இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட், முதல் நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 53 (மாலன் 26*, பும்ரா 2-15); இந்தியா 191 (தாகூர் 57, கோலி 50, வோக்ஸ் 4-55, ராபின்சன் 3-38) இங்கிலாந்து அணி 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.
முதல் நாளில் இந்தியா சொற்ப ரன்களுக்கு அவுட்டானாலும் பிற்பகல் சூரிய ஒளியில் மூன்று இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. மேகமூட்டமான சூழ்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது
ஆனால் ஆட்டத்தின் இறுதியில் அவர்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் மங்கலான சூரிய ஒளியில் ஆடவேண்டியதாக இருந்தது. அதனால் மூன்று விக்கெட்டுகள் – இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் ஜஸ்பிரித் பும்ராவிடமும் ஜோ ரூட் உமேஷ் யாதவ்விடம் வீழ்ந்தனர்.
ஒன்பது ஓவர்கள் பேட்டிங் செய்து பதினோரு ரன்கள் எடுத்த பிறகு முதலில் வெளியேறினார் ரோஹித் சர்மா. இது அவரது வழக்கமான விளையாட்டு அல்ல, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறிய விதம் சரியாக இல்லை. ராபின்சன், கேஎல் ராகுலை எல்பிடபிள்யூவில் சிக்க வைத்தார். இந்த முடிவு டிஆர்எஸ் மூலம் உறுதி செய்யப்பட்டது.
சேதேஷ்வர் புஜாரா குறைந்த ரன்களுக்கு மலிவாக வெளியேறும்போது அவர் அனைவராலும் விமர்சிக்கப்படுகிறார். அவர் 31 பந்துகளை எதிர்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் விளையாடினார், ஆனால் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஸ்விங்கருக்கு வெளியேறினார்.
டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன், ஒரு மணி நேரம் மைதானத்தில் நின்று ஆடிய பிறகு, இந்த வழியில் வெளியேறுவது தவறு; ஒத்துக்கொள்ள முடியாதது. கோஹ்லி நன்றாக விளையாடினார். ஆனால் மதிய உணவு இடைவெளியில் ரவிந்திர ஜடேஜாவை 5 வது இடத்தில் ஆடச்சொன்னது சர்ச்சைக்குரிய முக்கியப் புள்ளியாக இருந்தது. இருந்தாலும் இந்தியாவின் நடுத்தர வரிசையில் வலது கை மட்டையாளர்களாகவே இருந்ததால் ஜடேஜாவை இறக்கியிருப்பார் போலும்.
கோலி 22 ரன் எடுத்தபோது ரூட் அவரது கேட்ச் ஒன்றினை பிடிக்கத்தவறினார். அவர் முதலில் வோக்ஸ் வீசிய பந்தில், ஆஃப் ஸ்லிப்பில் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். இருப்பினும், ரூரி பர்ன்ஸ், இரண்டாவது ஸ்லிப்பில் பிடிக வேண்டிய கேட்சை ரூட் பிடிக்க முயற்சி செய்து தவறவிட்டார். வோக்ஸின் அடுத்த ஓவரில் ரூட் தனது தவறுக்குப் பரிகாரம் செய்தார்.
ஜடேஜாவின் வெளிப்புற விளிம்பில் பட்டு வந்த பந்தை பிடித்து ஒரு கடினமான கேட்சைப் பிடித்தார். ஆனால் கோஹ்லியின் சரளமான ஆட்டம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது. லீட்ஸில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து, கோஹ்லி தனது நிற்கும் நிலைப்பாட்டை சற்று சரிசெய்து, தனது ஆஃப் ஸ்டம்பை நோக்கி நகர்ந்து நின்று விளையாடினார்.
அவர் 85 பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதத்தை எட்டினார். கோஹ்லி தனது அரைசதத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து மீண்டும் அவுட் ஆனார். அஜிங்கியா ரஹானே மற்றும் ரிஷப் பந்த் இருவருக்கும் இது மோசமான சுற்றுப்பயணமாகும். எனவே அழுத்தத்தில் இருந்தனர். பன்ட் வெறித்தனமாக ஆட, ரஹானே மெதுவாக ஆடினார். ஆனால் இருவரும் வெகு நேரம் நிலைக்கவில்லை
இதன் பின்னர் தாகூர் ஆடிய ஆட்டம் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. முகமது ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணிக்குள் வந்தார். இன்று இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்படவில்லை. அஸ்வின் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்படவில்லை. தாகூர் அடித்து விளையாடுவது என முடிவு செய்து ஆடினார். மூன்று சிக்ஸ், ஏழு ஃபோர்களுடன் அவர் 57 ரன் அடித்தார். அவர் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தியா நான்கு பந்துகளில் கடைசி மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
ஐந்து பந்துகள் இடைவெளியில் இரண்டு இங்கிலாந்து தொடக்க வீரர்களையும் நீக்கி பும்ரா விளையாட்டை மீண்டும் சுவையானதாக ஆக்கினார்.
இன்று இரண்டாவது நாள்.