
ஐ.சி.சி டி20 போட்டி – 03.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
புதன் கிழமையன்று இரண்டு குரூப் 2 பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன். முதல் ஆட்டம் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே துபாயில் நடைபெற்றது. இரண்டாவது போட்டி இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தனுக்கும் இடையே அபுதாபியில் நடைபெற்றது.
நியூசிலாந்து-ஸ்காட்லாந்து
பூவாதலையா வென்ற ஸ்காட்லாந்து முதலில் நியூசிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. பவர்ப்ளே ஓவர்களில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கட்டுகள் இழந்து 52 ரன்கள் எடுத்தது. தொடக்கவீரர் ‘மார்டின் குப்டில்’ 18.3 ஓவர் வரை ஆடினார். 56 பந்துகளைச் சந்தித்து ஏழு சிக்ஸ், ஆறு ஃபோர்களுடன் 93 ரன் அடித்தார்.
மிட்சல், வில்லியம்சன், கான்வே மூவரும் பவர்ப்ளே ஓவர்களில் அவுட்டாகினர். க்ளென் மேகஸ்வெல் மிக மெதுவாக ஆடினார். ஆனாலும் குப்டிலின் அதிரடி ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த ஸ்காட்லாந்து அணியால் வேகமாக ரன் எடுக்க முடியவில்லை.
அந்த அணியின் வீரர்கள் நன்றாக ஆடினாலும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் ஸ்காட்லாந்து அணி இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்து ஆட்டத்தில் தோல்வியுற்றது.
இந்தியா – ஆப்கானிஸ்தான்
கடந்த இரண்டு ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டிய ஆட்டத்தை இன்று இந்திய அணி வெளிப்படுத்தியது. கடந்த இரண்டு ஆட்டங்களில் செய்த அதே செயல்களை இந்த ஆட்டத்திலும் கோலி செய்தார். பேட்டிங் ஆர்டரை மாற்றினார்.
மூன்றாவதாக் கோலி ஆடவராமல், ரிஷப் பந்தை ஆட அனுப்பினார், நான்காவதாகக்கூட அவரோ சூர்யகுமார் யாதவோ வரவில்லை; பதிலாக ஹார்திக் பாண்டியா வந்தார். ஆனால் இன்று யாரும் கோலியை குற்றம் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இந்தியா இருபது ஓவரில் 210 ரன் எடுத்தது. ஆட்டத்தை 66 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14.4 ஓவர் வரை ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா மூன்று சிக்சர், எட்டு ஃபோர்களுடன் 74 ரன் அடித்தார்; 16.3 ஓவர் வரை ஆடிய கே.எல். ராகுல் இரண்டு சிக்ஸ், ஆறு ஃபோருடன் 69 ரன் எடுத்தார்.
ரிஷப் பந்த் 13 பந்துகளில் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன். ஒரு அணித்தலைவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
இந்தியா பந்து வீச வந்தபோது இன்றைய ஆட்டத்தில் ஆடிய அஸ்வின் நாலு ஓவரில் 14 ரன் கொடுத்து இரண்டு விக்கட் எடுத்தார். ரவீந்தர் ஜதேஜா மூன்று ஓவரில் 19 ரன் கொடுத்து ஒரு விக்கட் எடுத்தார்.
19ஆவது ஓவரில் முகம்மது ஷமி இரண்டு விக்கட் எடுத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 144 ரங்கள் எடுத்தது.
நியூசிலாந்து, இந்திய அணிகள் பெற்ற வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றமில்லை. இரு அணிகளும் தங்களது அரையிறுதி வாய்ப்புகளை இன்னும் இழந்துவிடவில்லை.
நாளை இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் துபாயில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறும்; இரண்டாவது ஆட்டம் அபுதாபியில் இலங்கை-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும்