
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 35,
கண்ணன் என் காதலன் 5
ஆசை முகம் மறந்து போச்சே – விளக்கம்
இந்தப் பாடல் ஓர் அற்புதமான பாடல். பாரதிக்கு முன்னும் பின்னும் இத்தகைய பாடலை நாம் காண இயலவில்லை. பிரிவாற்றாமையில் நாயகி தோழியிடம் புலம்புகிறாள்.
கண்ணன் என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டான்; போய் வெகு நாட்களாகிறது போலத் தோன்றுகிறது. அதனால் அவனது ஆசி முகம் கூட மறந்துபோஸ்விட்டது தோழி, நான் என்ன செய்வேண். அவன் முகம் மறந்து போனாலு அவன் தந்த காதல் மறந்து போகவில்லை தோழி இதை யாரிடம் சொல்வேன்? நேசம் மறக்கதபோது, முகம் மறக்கலாமா?
என் மனக் கண்ணில் ஏதோ ஒரு முகம் தெரிகிறது ஆனால் அதிலே அவன் முக அழகு இல்லை. நான் ஆசைப்படுகின்ற அந்த முகத்தை வலிந்து நினைவுபடுத்திப் பார்த்தால் அதிலே அவனுடைய மலர்ச்சிரிப்பைக் காணவில்லை. கண்ணனின் உறவையே என் உள்ளம் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும். என்வாயும் அவன் புகழையே உரைத்துக்கொண்டிருக்கும்.

என்னுடைய கண்கள் செய்த பாவம் கண்ணனுடைய உருவம் மறந்து போகத்தொடங்கியதே. என்னைப் போல் ஒரு பேதையை யாரேனும் பார்த்திருக்க முடியுமா? தேனை மறந்திருக்கும் வண்டு போலவும், ஒளிச் சிரிப்பை மறந்த மலர் போலவும், வான் மழையை மறந்திருக்கும் பயிர் போலவும் இங்கு ஏதேனும் இருக்குமா? கண்ணன் முகம் மறந்து போன நான் இருக்கிறேன். கண்ணன் உருவம் மறந்து போனால் என்னுடைய இந்தக் கண்களால் என்ன பயன்? அவனுடைய வண்ணப்படம் கூட எதுவும் என்னிடத்தில் இல்லை. இனிமேல் எனக்கு வாழும் வழி என்னடீ தோழி? – என்று நாயகி புலம்புகிறாள்.
அடுத்த பாடலை கண்ணன் – என் காந்தன் என்ற தலைப்பில் பாரதியார் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பாரதியார் வராளி இராகத்தில், திஸ்ர ஏக தாளத்தில் சிருங்கார ரசம் ததும்ப எழுதியிருக்கிறார்.
அண்மையில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கணவன்-மனைவியிடம் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் நீங்கள் உங்கள் மனைவிக்கு வாங்கித்தந்த பரிசு என்ன எனக் கேட்டார். என்னோடு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய மனைவி “நீ என்ன வாங்கிக் கொடுத்தாய்?” என என்னிடம் கேட்டார். நான் எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. எனவே மையமாகச் சிரித்துவைத்தேன். அப்போது என் மகள், “இந்த பரிசு வாங்கிக் கொடுப்பதெல்லாம் இப்போதுதான் வந்தது அம்மா?” என்றாள். “இதெல்லாம் ஒரு வியாபார உத்தியாகப் புகுத்தப்பட்டது” என விளக்கம் கொடுத்தாள்.
“வணிகவியல் படித்த எனக்கே பாடம் எடுக்கிறாள் என்மகள்” என்று கூறியபடியே என் மனைவி என்னிடத்தில் “என்ன பண்டிதரே காதலன் காதலிக்கு பரிசு வாங்கித்தரும் பழக்கம் எப்போதிலிருந்து இருக்கிறது?” என்றாள். நான் அதற்கு சங்க காலத்திலிருந்து இருக்கிறது எனப் பதில் சொன்னேன். பொய் சொல்ல முடியாதல்லவா?
தமிழிலக்கியத்தின் சிறப்பான பகுதி ‘அக இலக்கியம்’ ஆகும். தலைவனும் தலைவியும் காதலிக்கும்போது தலைவன் ‘கையுறை’ கொண்டுவந்து காதலிக்கு கொடுப்பது வழக்கம். இந்தக் ‘கையுறை’தான் காதலன் காதலிக்கு வாங்கித் தரும் பரிசு. பெரும்பாலும் தழை அல்லது மலர் மாலை போன்ற பொருட்களே ‘கையுறை’யாக அல்லது பரிசாக இருக்கும். இப்போது கையுறை என்பது செல்போன், அதற்கு ரீசார்ஜ் என விலை அதிகமான பொருட்களாகிவிட்டது. இனி பாடலைப் பார்க்கலாம்.

கனிகள் கொண்டுதரும் – கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் – பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் – கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே – வண்ணம்
இயன்ற சவ்வாதும். … 1
கொண்டை முடிப்பதற்கே; – மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே – கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே – செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் – கண்ணன்
பேசருந் தெய்வமடீ! … 2
குங்குமங் கொண்டுவரும் – கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் – தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் – முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ! – பின்னோர்
வருத்த மில்லையடி! . … 3
பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்.