
இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் ஆட்டம்
- முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
மூன்றாம் நாளிறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்துள்ளது. மாயங்க் அகர்வால் 4 ரன்னுடனும் புஜாரா 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார். முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. விக்கட் இழப்பின்றி 129 ரன் என்ற கணக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கட்டை 151 ரன்னுக்கு இழந்தது. ஆனால் ஏனைய விக்கட்டுகள் அடுத்த 99 ரன்களுக்குள் விழுந்துவிட்டன.
டாம் லாதம் 95 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இன்று விக்கட் கீப்பர் விருத்திமான் சஹா விளையாடவில்லை. அவருக்கு காலையில் கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் கே.எஸ். பரத் விக்கட்கீப்பராக விளையாடினார். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கியதன்மூலம் தனது ஆறாவது டெஸ்டிலேயே 50 விக்கட்டுகள் எடுத்தவரானார்.
பந்து வீச்சின்போது அஷ்வின் தன்னை மறைக்கிறார் என அம்பயர் நிதின் மேனனுக்கும் அஷ்வினுக்கும் இன்று கொஞ்ச நேரம் வார்த்தைப் போர் நடந்தது. அணித்தலைவர் ரஹானேயும் இந்த வாக்குவாத்த்த்தில் கலந்துகொண்டார். அக்சர் படேல் தன்னுடைய நான்காவது டெஸ்ட் விளையாடுகிறார். அதில் இன்றோடு ஐந்து முறை ஐந்து விக்கட் எடுக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். பிப்ரவரி 2021இல் சென்னையில் அவர் தனது முதல் டெஸ்டை விளையாடினார்.
அதில் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்னுக்கு 5 விக்கட் எடுத்தார். அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கட் (6/38 & 5/32) எடுத்தார்.
நாலாவது டெஸ்டிலும் ஐந்து விக்கட் (5/48) எடுத்தார். இன்று ஐந்தாவது முறை. இந்தச் சாதனையைச் செய்யும் முதல் இந்தியர் இவரே.