IPL 2022: ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக்

Published:

ipl 2022 - 2026

ராஜஸ்தான் vs பெங்களூரு
ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக்

  • K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் ஐந்தாம் நாள் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே மைதானத்தில், ஐ.பி.எல்லின் 13ஆவது போட்டி நடந்தது.

தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அகமது ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது.

அந்த அணியின் தொடக்க வீரர் யஷஸ்வீ ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்திலும் நான்கு ரன்களில் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜோஸ் பட்லரும் தேவதத் படிக்கலும் அடுத்த ஒன்பது ஓவர்கள் சிறப்பாக ஆடினர். அதற்குப் பின்னர் ஹெட்மையர் 31 பந்துகளில் 42 ரன் அடித்தார். ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 47 பந்துகளில் அவர் 6 சிக்சரிகளுடன் 70 ரன் அடித்தார்.

இருபது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. 170 என்ற இலக்கு பெங்களூரு அணியைப் பொருத்த வரையில் ஒரு அடையக்கூடிய இலக்குதான்.

அதற்கேற்றார் போல ட்யூ ப்ளேசிசும் (20 பந்துகள், 29 ரன்) அனுஜ் ராவத்தும் (25 பந்துகள், 26 ரன்) பெங்களூரு அணிக்கு மிக அருமையான தொடக்கத்தைத் தந்தனர். ஆனால் ஏழாவது ஓவருக்கும் 13ஆவது ஓவருக்கும் இடையில் பெங்களூரு அணியின் ஐந்து விக்கட்டுகள் விழுந்தன.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

தொடக்கவீரர்கள் இருவரைத் தவிர, விராட் கோலி (5 ரன், ரன் அவுட்) டேவிட் வில்லி (பூஜ்யம்), ரூதர்ஃபோர்டு (5 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி, பெங்களூரு 12.3 மூன்று ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 87 ரன் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதும் ஆடவந்தனர். 42 பந்துகளில் 82 ரன் அடிக்கவேண்டிய ஒரு நிலை.

அதன் பின்னர் அஷ்வின் வீசிய 13ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் 20 ரன் அடித்தார். 15ஆவது ஓவரில் 16 ரன்கள் அடிக்கப்பட்டது. இப்படியே கார்த்திக்கும் ஷபாஸ் அகமதும் மிக நன்றாக விளையாடி 19.1 ஓவரில் 173 ரன் எடுத்து ராஜஸ்தான் அணியை வென்றனர். தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related articles

Recent articles

spot_img