ipl 2022 - 2026

IPL 2022: சென்னை Vs மும்பை

விளையாட்டு
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 21 ஏப்ரல் 2022 சென்னை vs மும்பை
– K.V. பாலசுப்பிரமணியன்

கடைசி பந்தில் தோனி அடித்த ஃபோர்

நேற்று, ஏப்ரல் இருபத்தி ஒன்றாம் நாள் சென்னை, மும்பை அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 33ஆவது போட்டி நடந்தது. மும்பை அணி (155/7, திலக் வர்மா 51, சூர்யகுமார் யாதவ் 32, முகேஷ் சௌத்ரி 3/19) சென்னை அணியிடம் (156/7, ராயடு 40, உத்தப்பா 30, தோனி 28* டேனியல் சாம்ஸ் 4/30) தோற்றுப்போனது.

இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் பல முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு, இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன. இருந்தாலும் இந்த இரு அணிகளும் விளையாடும்போது ஒரு பரபரப்பு, உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

இந்த ஆட்டமும் அப்படித்தான். டாஸ் வென்ற சென்னை அணி மும்பை அணியை மட்டையாடச் சொன்னது. மும்பை அணிக்காக ஹ்ருதிக் ஷௌகீன் என்ற புதிய வீரர் ஆடினார். இவர் ஒரு ஆஃப்-ஸ்பின் வீசக்கூடிய ஆல்ரவுண்டர். ரிலே மெரிடித் என்ற வீரரும் இன்று மும்பைக்காக விளையாடினார்.

முதல் ஓவரில், இரண்டாவது பந்தில் ரோஹித் ஒரு எளிய கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். இருவரும் ரன் எதுவும் எடுக்க வில்லை. மூன்றாவது ஓவரில் டிவால்ட் ப்ரிவிஸ் ஆட்டமிழந்தார். அணியின் ஒரே நம்பிக்கையான சூர்யகுமார் யாதவ் எட்டாவது ஓவரில் 32 ரன்னுக்கு அவுட்டானார்.

புதிய வீரர் ஷௌகீனும் (25 ரன்) திலக் வர்மாவும் கொஞ்சம் நிலைத்து ஆடினர். ஒன்பது பந்துகள் ஆடிய பொலார்ட் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்தது.

பேட்டிங்கில் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், பொலார்ட் ஆகியோர் இதுவரை இந்த ஐ.பி.எல்லில் சொல்லிக்கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை. ஜெயதேவ் உனக்தத் கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்திருக்கிறார்.

அடுத்து ஆட வந்த சென்னை அணியும் ஒன்றும் பிரமாதமாக ஆடவில்லை. கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்று விட்டாதால் எல்லோரும் அந்த அணியை, குறிப்பாக தோனியைக் கொண்டாடுகிறார்கள். இந்திய அணியில் விளையாடக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் எவரும் சென்னை அணியில் சரியாக ஆடவில்லை.

உத்தப்பா 30 ரன் எடுக்கிறார்; அம்பாடி ராயடு 40 ரன் எடுக்கிறார்; தோனி கடைசி பந்தில் நாலு ரன் அடிக்கிறார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்கவில்லை; ஷிவம் துபே 13 ரன்; ஜதேஜா 3 ரன்.

மோசமான இரண்டு அணிகளில் சென்னை அணி சிறந்த அணி என பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.