ipl 2022 - 2026

IPL 2022: பஞ்சாப் vs சென்னை

விளையாட்டு இந்தியா
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – பஞ்சாப் vs சென்னை

  • K. V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் இருபத்தைந்தாம் நாள் பஞ்சாப், சென்னை அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 38ஆவது போட்டி நடந்தது. பஞ்சாப் அணி (187/4, ஷிகர் தவான் 88*, ராஜபக்ஷா 42, ப்ராவோ 2/42) சென்னை அணியை (176/6, அம்பாடி ராயடு 78, கெய்க்வாட் 30, ரபாடா 2/23, ரிஷி தவான் 2/39) தோற்கடித்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான மயாங்க் அகர்வால் ஆறாவது ஓவரில் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பானுகா ராஜபக்ஷா சிறப்பாக ஆடினர்.

17.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்த ராஜபக்ஷா 32 பந்துகளில் 42 ரன் அடித்தார். அதன் பின்னர் ஆடவந்த லிவிங்க்ஸ்டோன் 7 பந்துகளில் 19 ரன் அடித்தார். ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன் எடுத்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய சென்னை அணி 2ஆவது ஓவரில் உத்தப்பா (1 ரன்), ஆறாவது ஓவரில் சாண்ட்னர் (9 ரன்), ஏழாவது ஓவரில் ஷிவம் துபே (8 ரன்) ஆகியோரை இழந்தது.

அம்பாடி ராயடு கெய்க்வாடுடன் இணைந்து சிறப்பாக ஆடினார், கெய்க்வாட் 12.3ஆவது ஓவரில் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். 16ஆவது ஓவரில் ராயடு மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அதனால் சென்னை அணி வெற்றி பெறலாம் என நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் அர்ஷ்தீப் சிங் ஒரு அருமையான 17ஆவது ஓவரை வீசினார். அதில் அவர் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரை வீசிய ரபாடாவும் ஓர் அற்புதமான ஓவரை வீசினார். அந்த ஓவரிலும் ஆறு ரன்கள் மட்டுமே தரப்பட்டது; ராயுடு வேறு ஆட்டமிழந்து விட்டார்.

12 பந்துகளில் 35 ரன் எடுக்க வேண்டிய நிலைமை. ஆனால் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.