ipl 2022 - 2026

IPL 2022: லக்னோ vs கொல்கத்தா

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல் மே 18, 2022
– லக்னோ vs கொல்கொத்தா

-K.V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 66ஆவது ஆட்டம் மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ, கொல்கொத்தா அணிகளுக்கிடையே நடந்தது.

லக்னோ அணி (210/0, டி காக் 140, கே.எல். ராகுல் 68) கொல்கொத்தா அணியை (208/8, நித்தீஷ் ராணா 42, ஷ்ரேயாஸ் ஐயர் 50, சாம் பில்லிங்ஸ் 36, ரிங்கு சிங் 40, மொஹிஷின் கான் 3/20, ஸ்டொய்னிஸ் 3/23) 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக், கே.எல். ராகுல் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை ஆடினார்கள். டி காக் 70 பந்துகளில் 140 ரன்; 10 சிக்சர்கள், 10 ஃபோர். ராகுல் 51 பந்துகளில் 68 ரன். 17ஆவது ஓவர் வரை ரன்ரேட் சுமாராகத்தான் இருந்தது.

லக்னோ அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் 19ஆவது ஓவர் தொடக்கத்தில் டி காக், ராகுல் இருவருக்கும் ஒரு செய்தி அனுப்புகிறார். “களைத்துவிட்டீர்கள் என்றால் ரிடயர்டு அவுட் முறையில் வெளியில் வாருங்கள் நாங்கள் அடித்து ஆடக்கூடிய இருவரை உள்ளே அனுப்புகிறோம்” என்று. இவர்கள் தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

19ஆவது ஓவரில் மூன்று பந்துகளை டி காக் சிக்சருக்குப் பறக்கவிடுகிறார். ராகுல் ஒரு சிக்சர் அடித்தார். 20ஆவது ஓவரில் நான்கு பந்துகளை டி காக் பவுண்டரிக்கு அனுப்புகிறார். டி காக் இதுவரை இப்படி ஆடியதில்லை. இந்த அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 210 ரன்கள் எடுத்தது.

கொல்கொத்தா அணி 211 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்யத்தொடங்கியது. அந்த அணிக்காக ஒரு புதிய தொடக்க வீரர்கள் ஜோடி களம் இறங்கியது; வெங்கடேஷ் ஐயர், அபிஜித் தோமர் ஆகியோர்.

முதல் ஓவர், நான்காவது பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் அபிஜித் தோமர் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் நித்தீஷ் ராணாவும் ஷ்ரேயாஸ் ஐயரும் நன்றாக ஆடினர். ராணா 22 பந்துகளில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 10ஆவது ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 99 ரன் எடுத்திருந்தது.

கொல்கொத்தா அணியில் தடாலடி வீரர்கள் உள்ளனர். எனவே வெற்றி சாத்தியம்தான் என அனைவரும் நினைத்தனர். 17ஆவது ஓவர் முடிவில் 156/6 என்ற ஸ்கோர்; 18 பந்துகளில் 55 ரன் எடுக்கவேண்டிய சூழ்நிலை. சுனில் நரேன், ரிங்கு சிங் இருவரும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இருவரும் இமாலய சிக்சரெல்லாம் அடித்து கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்கவேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தார்கள். கடைசி ஓவரை ஸ்டொயினிஸ் வீசினார். முதல் பந்து ஃபோர்; இரண்டு மூன்றாவது பந்துகள் சிக்சர். நாலாவது பந்தில் 2 ரன். மூன்று ரன்- இரண்டு பந்துகள் என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார்.

லீவிஸ் ஒரு அருமையான கேட்ச் பிடித்து அவரை அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் உமேஷ் யாதவ் கிளீன் போல்ட் ஆனார். இதனால் கொல்கொத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. லக்னோ அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.