ind vs aus test series - 2026

IND Vs AS Test: 450 விக்கெட் சாதனை படைத்த அஸ்வின்

விளையாட்டு இந்தியா சற்றுமுன்
ind vs aus test series - 2026

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட், நாக்பூர், முதல் நாள் 09.02.2023
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்னுக்கு ஆல் அவுட் (லபுசேன் 49, ஸ்மித் 37, ஜதேஜா 5/47, அஷ்வின் 3/42) இந்தியா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 77 ரன் (ரோஹித் ஷர்மா 56*, கே.எல். ராகுல் 20) நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. கடந்த ஒரு மாத காலமாகவே ஆஸ்திரேலிய அணி தரப்பிலிருந்து இந்தத் தொடரை வெல்வதற்கு நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம் – என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அஷ்வினைப் போல சுழல் பந்து வீசக்கூடிய ஒரு இந்திய பந்துவீச்சாளரைக் கொண்டு வந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சி செய்தனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் அதற்கான தாக்கம் எதுவும் தெரியவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் (அது சிராஜ் வீசிய முதல் ஓவர்) உஸ்மான் க்வாஜாவிற்கு வீசிய முதல் பந்தில் சிராஜ் ஒரு அருமையான அவுட் ஸ்விங்கர் வீசினார். இடதுகை ஆட்டக்காரரான க்வாஜாவிற்கு அது இன்ஸ்விங்கராக அமைந்து அவர் எல்.பி.டபில்யூ ஆனார்.

முதலில் அம்பயர் தரவில்லை; பின்னர் இந்திய அணி ரிவியூ செய்தது; அதனால் க்வாஜா அவுட்டானார். அடுத்த ஓவரில் முதல் பந்தில் வார்னர், ஷமியால் கிளீன் போல்டானார். அதன் பின்னர் ஆடவந்த லபுசேன் மற்றும் ஸ்மித் அடுத்த 29 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர். அதாவது உணவு இடைவேளை வரை அவர்கள் ஆடினர். உணவு இடைவேளையின் போது அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 76 ரன் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது ஓவரில் ஜதேஜா அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 42ஆவது ஓவரில் ஜதேஜா பந்தில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அலக்ஸ் கேரியும் பீட்டரும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள். 54ஆவது ஓவரில் கேரி அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் பேட் கம்மின்ஸையும் கடைசி ஆட்டக்காரரான ஸ்காட் போலண்டையும் அஷ்வின் ஆவுட்டாக்கினார். ஜேதேஜா மேலும் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். நீண்டநாள் கழித்து ஆடவரும் ஜதேஜாவிற்கு இது ஒரு நல்ல தொடக்கம்.

அஷ்வின் தனது 450ஆவது விக்கட்டை இந்த டெஸ்டில் எடுத்துள்ளார். அதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. மொத்தம் 24 ஓவர்கள் ஆடியது. அதில் 23ஆவது ஓவரில் கே.எல். ராகுல் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அஷ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ரோஹித் ஷர்மா 56 ரன்களோடும் களத்தில் உள்ளனர். ஆட்டநேர இறுதியில் இந்திய அணி ஒருவிக்கட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.