2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 13 – 2015 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின. மேலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டி இதுவாகும்.
இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியானது 14 அணிகளைக் கொண்டிருந்தது, அவை ஏழு குழுக்கள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தங்கள் குழுவில் விளையாடின.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைக் கொண்ட நாக் அவுட் நிலைக்கு முன்னேறின. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. குரூப் A பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றன.
இவற்றுள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேச அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின. குரூப் B பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாபே, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றுள் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.
காலிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணியை வென்றது; நியூசிலாந்து மேற்கு இந்தியத்தீவுகள் அணியை வென்றது; பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி வென்றது; இந்திய அணி வங்கதேசத்தை வென்றது. அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியையும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவையும் வென்றது.
இறுதிப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
குரூப் ஆட்டங்களில் இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானோடு நடந்த ஆட்டத்தில் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய பேட்ஸ்மென்களில் ஷிகர் தவான் 8 மேட்சுகளில் 412 ரன் எடுத்தார்; இதில் இரண்டு செஞ்சுரிகள் அடக்கம். ரெய்னா, கோலி, ரோஹித் ஷர்மா தலா ஒரு செஞ்சுரி அடித்தனர். உமேஷ் யாதவ் 18 விக்கட்டுகளும் ஷமி 17 விக்கட்டுகளும் எடுத்தனர்.