- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதிநாலாம் நாள்
ஐபிஎல் 2024 – 04.04.2024 – அகமதாபாத்
குஜராத் டைடன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
குஜராத் அணியை (199/4, ஷுப்மன் கில் 89*, சாய் சுதர்ஷன் 33, கேன் வில்லியம்சன் 26, ராகுல் திவாத்தியா 23, ரபாடா 2/44) பஞ்சாப் அணி (ஷஷாங்க் சிங் 61*, பிரப்சிம்ரன் சிங் 35, அஷுத்தோஷ் ஷர்மா 31, ஜானி பெயர்ஸ்டோ 22, நூர் அகமது 2/32) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா வழக்கம்போல இரண்டு அதிரடி ஷாட்டுகள் விளையாடிவிட்டு 11 ரன்னுக்கு மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் ஆட்டமிழக்காமம் 89 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) கேன் வில்லியம்சனுடனும் (22 பந்துகளில் 26 ரன்) சாய் சுதர்ஷனுடனும் (19 பந்துகளில் 33 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சாய் சுதர்ஷன் 13.5 ஓவரில் ஆட்டமிழந்தபோது விளையாட வந்த விஜய் ஷங்கர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கடைசியாக வந்த திவாத்தியா எட்டு பந்துகளில் 23 ரன் அடித்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்திருந்தது.
200 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இரண்டாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பெயர்ஸ்டோ 13 பந்துகளில் 22 ரன் அடித்து 5.1ஆவது ஓவரில் அவுட்டானார்.
சாம் கரன் (5 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. பிரப்சிம்ரன் சிங் (24 பந்துகளில் 35 ரன்), சிக்கந்தர் ராசா (16 பந்தில் 15 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (8 பந்துகளில் 16 ரன்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆனால் 8.4ஆவது ஓவரில் ஆடவந்த ஷஷாங்க் சிங் (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) ஜித்தேஷ் ஷர்மா (16 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 19.5 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.