
ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம்-2 – 01.06.2025 – அகமதாபாத் – மும்பை vs பஞ்சாப்
ஐயரின் தனிப்பட்ட வெற்றி
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மும்பை இந்தியன்ஸ் அணியை (203/6, சூர்யகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பெயிர்ஸ்டோ 38, நமன் திர் 37, ஹார்திக் பாண்ட்யா 15, ரோஹித் ஷர்மா 8, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2/43, கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டோயினிஸ், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (207/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87, நெஹல் வதேரா 48, ஜோஷ் இங்கிலீஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, அஷ்வினி குமார் 2/55, போல்ட், ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை அணி முதலில் மட்டையாட வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அகமதாபாத்தில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
மழை காரணமாக ஆட்டக்களத்தின் தன்மை மாறியிருக்குமோ என்ற அச்சத்தோடு பஞ்சாப் அணி களமிறங்க, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து பஞ்சாப் அணிக்கு நிம்மதியளித்தார்.
மற்றொரு தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (29 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
பெயர்ஸ்டோ ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (26 பந்துகளில் 44 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்), நமன் திர் (18 பந்துகளில் 37 ரன், 7 ஃபோர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.
204 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் (21 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.
இவர்களுக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இன்றைய ஆட்டத்தின் கதாநாயகன். பும்ரா வீசிய மிகச் சிறப்பான யார்க்கர்களைச் சமாளித்து, அவற்றை பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அனுப்பினார். அவருடன் இணைந்து நெஹல் வதேரா (29 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), சிறப்பாக ஆடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் விளையாடும்.





