
இந்தியா – இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் – மான்செஸ்டர் –– 23 மற்றும் 27 ஜூலை 2025 இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி அபார ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (358, யசஷ்வி ஜெய்ஸ்வால் 58, கே. எல். ராகுல் 46, சாய் சுதர்ஷன் 61, ஷுப்மன் கில் 12, ரிஷப் பந்த் 54, ஷர்துல் தாகூர் 41, பென் ஸ்டோக்ஸ் 5/72, ஆர்ச்சர் 3/73, வோக்ஸ் மற்றும் டாசன் தலா ஒரு விக்கட்), இரண்டாவது இன்னிங்க்ஸ் (425/4, ஷுப்மன் கில் 103, வாஷிங்க்டன் சுந்தர் 101, ரவீந்தர் ஜதேஜா 107, ராகுல் 90, வோக்ஸ் 2/67, பென் ஸ்டோக்ஸ் 1/33). இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (669, க்ராலி 84, பென் டக்கட் 94, ஒலி போப் 71, ஜோரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141, ப்ரைடன் கார்சே 41, ஜதேஜா 4/143, சுந்தர் 2/107, பும்ரா 2/112, காம்போஜ் 1/89, சிராஜ் 1/140) ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (107 பந்துகளில் 58 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (98 பந்துகளில் 46 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த சாய் சுதர்ஷன் (151 பந்துகளில் 61 ரன்) நன்றாக விளையாடினார்.
அவரோடு இணைந்த ஷுப்மன் கில் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் (75 பந்துகளில் 54 ரன்), ரவீந்தர் ஜதேஜா (40 பந்துகளில் 20 ரன்), ஷர்துல் தாகூர் (88 பந்துகளில் 41 ரன்) எடுத்தனர் இதனால் முதல் இன்னிங்க்ஸில் 114.1 ஓவர்களில் 358 ரன் எடுத்து இந்திய அணி அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்சில் ஜோ ரூட் (248 பந்துகளில் 150 ரன்), பென் ஸ்டோக்ஸ் (198 பந்துகளில் 141 ரன், தொடக்க வீரர் க்ராலி (113 பந்துகளில் 84 ரன்) பென் டக்கட் (10 பந்துகளில் 94 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். 157.1 ஓவர்கள் ஆடி அந்த அணி 669 ரன் சேர்த்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சுமாராக பந்துவீசினர். ஆட்டக்களமும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. ஜதேஜா நாலு விக்கட்டுகள் எடுத்தார்.
நான்காம் நாள் உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது. இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க 311 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்கு முந்தைய டெஸ்டில் 192 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது. எனவே நிச்சய வெற்றி என்ற மனப்பான்மையோடு இங்கிலாந்து அணி களமிறங்கியது .
ரிஷப் பந்த் ஏற்கனவே கையில் எலும்பு முறிவு காரணமாக ஆடமாட்டார் என அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர் ஆடினார். இந்த முறை ஆடும்போது ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது அவரது கால் விரலில் பந்து பட்டு, காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அவர் மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் வந்து முதல் இன்னிங்க்ஸில் ஆடி, 54 ரன் எடுத்தார். இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் ஆடமாட்டார் என அறிவித்திருந்தார்கள்.
எனவே ஜெய்ஸ்வால், ராகுல், சுதர்ஷன், கில், சுந்தர், ஜதேஜா, ஷர்துல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் அதன் பின் வெற்றி நமதே என இங்கிலாந்து அணி நினைத்திருந்தது. அதற்கு ஏற்றாற்போல முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சுதர்ஷன் இருவரும் பூஜ்யத்தில் ஆட்டமிழந்தார்கள். அதன் பின் நடந்தது கதையின் முக்கியத் திருப்பம். நான்காம் நாள் முடிவில் ராகுல் 87 ரன்னுடனும், கில் 78 ரன்னுடனும் இந்திய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 174 ரன்னுடனும் ஆட்டத்தை முடித்தது.
ஐந்தாம் நாளில் ராகுல் 7 ஓவர்கள் விளையாடி 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அன்றைய தினம் 17 ஓவர்கள் விளையாடி ஷுப்மன் கில் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி வெற்றி நிச்சயம் என உற்சாகமடைந்தது. அதன் இன்னர் வாஷிங்க்டன் சுந்தர் (206 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்) மற்றும் ரவீந்தர் ஜதேஜா (185 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 107 ரன்) சிறப்பாக ஆடி ஆட்டத்தைச் சமனில் முடித்தனர்.
ஐந்தாவது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.





