ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் நேற்று மோதிய இந்தியா கோல் மழை பொழிந்தது. தொடக்கத்தில் இருந்தே ஹாங்காங் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் 26-0 என்ற கோல் கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தனர். சர்வதேச ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இது. முன்னதாக 1932ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 24-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. 86 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. சர்வதேச ஹாக்கியில் நியூசிலாந்து அணி 1994ல் சமோவா அணிக்கு எதிராக 36-1 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடத்தில் உள்ளது.
* உலக தரவரிசையில் இந்தியா 5வது இடத்திலும், ஹாங்காங் 45வது இடத்திலும் உள்ளன.
* முதல் 5 நிமிடத்துக்குள்ளாகவே இந்தியா 4 கோல் போட்டது.
* முதல் குவார்ட்டர் முடிவில் 6-0 என முன்னிலை வகித்த இந்தியா, 2வது 15 நிமிட ஆட்டத்தின் முடிவில் 14-0 என எகிறியது. பின்னர் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 26-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
* இந்தியா சார்பில் ரூபிந்தர்பால் 5, ஹர்மான்பிரீத் 4, ஆகாஷ்தீப் 3 கோல் போட்டனர். மன்பிரீத், லலித் உபாத்யாய், வருண் குமார் தலா 2 கோல் அடிக்க, சுனில், விவேக், மன்தீப், ரோகிதாஸ், தில்பிரீத், சிங்லென்சனா, சிம்ரன்ஜீத், சுரேந்தர் தலா ஒரு கோல் போட்டனர்.
* இந்திய அணி நாளை ஜப்பான் அணியுடன் மோதுகிறது.




