இந்திய அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டர் குக் அறிவித்துள்ளார்.2006ம் ஆண்டு நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அலஸ்டர் குக் (33 வயது), இதுவரை 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன் (அதிகம் 294, சராசரி 44.88, சதம் 32, அரை சதம் 56) குவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர், அதிக ரன் குவித்தவர், அதிக சதங்கள் விளாசியவர் என்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ள குக், 59 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார்.டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் 6வது இடத்தில் உள்ளார். சச்சின் (15,921), பான்டிங் (13,378), காலிஸ் (13,289), டிராவிட் (13,288), சங்கக்கரா (12,400) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். தனது ஓய்வு முடிவு குறித்து குக் கூறுகையில், ‘இனியும் சாதிக்க என்னிடம் எதுவும் இல்லை. நான் கற்பனை செய்து கூட பார்க்காத பல சாதனைகள் எனக்கு வசமாகி உள்ளன. இங்கிலாந்து அணிக்காக தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து நீண்ட காலம் விளையாட முடிந்ததை அதிர்ஷ்டமாகவும், பெரிய கவுரவமாகவும் நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே ஓய்வு பெறுவது பற்றி தீவிரமாக யோசித்து வந்தேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற இதுவே சரியான தருணம். இது கடினமான முடிவு தான். ஓய்வு பெறும் நாள் சோகமானது என்றாலும், அணிக்காக இயன்ற அளவு பங்களித்தேன் என்ற திருப்தியுடன் சிரித்தபடி விடை பெற முடியும் என நினைக்கிறேன்’ என்றார். கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களின் நினைவுகளை பகிர்ந்து, பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Popular Categories




