இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக். 4ம் தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான அட்டவணையை கிரிக்கெட் வாரிய செயலர் அமிதாப் சவுத்ரி நேற்று வெளியிட்டார். முதல் டெஸ்ட் போட்டி அக். 4ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெறும் (அக். 12-16).
முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் அக்.21ம் தேதி நடக்க உள்ளது. அடுத்து இந்தூர் (அக். 24), புனே (அக். 27), மும்பை (அக். 29) மற்றும் திருவனந்தபுரத்தில் (நவ.1) ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 போட்டிகள் கொல்கத்தா (நவ. 4), லக்னோ (நவ. 6) மற்றும் சென்னையில் (நவ. 11) நடத்தப்படுகின்றன. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் செப். 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த தொடர் முடிந்த சில நாட்களிலேயே வெஸ்ட் இண்டீசுடன் கடினமான டெஸ்ட் தொடர் தொடங்குவது இந்திய வீரர்கள் மீதான சுமையை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டே, ஆசிய கோப்பை போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.