
சென்னை மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மருத்துவரின் அடக்கம் செய்யப்பட்டது. மக்கள் பணியாற்றிய மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநரும், தமிழக முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா தொற்றால் மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. மேலும் அம்மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ பணியாற்றும் அனைவரையும் மதிப்போம். கொரோனாவால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டிய கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்திருக்கிறது. அதனை பின்பற்றினால் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது நமது கடமை’ என்று பதிவிட்டுள்ளார்
செய்வதற்கான வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டிய கட்டுப்பாடுகளையும்,வழிகாட்டுதல்களையும் அளித்திருக்கிறது .அதனை பின்பற்றினால் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது நமது கடமை. (2/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 20, 2020