தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு, 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதையும் படியுங்கள்: என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்படி, தேர்வு மையங்களின் எண்ணிக்கை ஏற்ப இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
