
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி இரு பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் அருகே உள்ள பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி மகன் சஞ்சய்(18), மகள் சஞ்சனா(16). இவர்கள் இருவரும் திருப்புனவாசலில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இவர்களது சித்தப்பா இளையராஜா(36), நேற்று பள்ளிமுடிந்த பிறகு இருவரையும் தனது பைக்கில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பறையத்தூர் அருகே சென்றபோது லேசான மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் அந்த இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஆவுடையார்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை துவங்கி ஆங்காங்கே இடி, மின்னலுடன் மழைபெய்து வருவதால், மழை நேரங்களில் மரங்களுக்கு கீழே ஒதுங்கக்கூடாது, மழைநேரங்களில் பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.