நிவாரணமாக அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:

வெள்ள நிவாரணத்துக்கு அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. கடலூர் மாவட்டம் கடந்த ஒரு மாதமாக மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை.
வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டாத அரசு, நிவாரணப் பணிகளுக்காக மற்றவர்கள் அளிக்கும் நிதி மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொள்வதிலும் அலட்சியம் காட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதுமானவை அல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம், சேதமடைந்த பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு ஆகியவற்றை வழங்க அதிக நிதி தேவைப்படும். நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1940 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. மத்திய அரசு அடுத்தக்கட்டமாக எவ்வளவு நிதி வழங்கும் என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு ஆதாரங்களில் இருந்து நியாயமான வழிகளில் எவ்வளவு நிதி திரட்ட முடியுமோ, அவ்வளவு நிதி திரட்டுவது தான் தமிழக மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாளர்களின் முதன்மைப் பணியாகும்.
ஆனால், மற்றவர்கள் தாமாக முன்வந்து வழங்கும் நிவாரண நிதியைக் கூட பெற்றுக் கொள்ள தமிழக அரசு மறுக்கிறது. நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்து 5 நாட்கள் ஆகியும் அதை ஏற்றுக்கொள்வது குறித்த முடிவை தமிழக அரசு அறிவிக்கவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் ஓடோடி வந்து தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவது அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களும் தான். முதல் கட்ட மழையால் சென்னையும், கடலூரும் பாதிக்கப்பட்ட போதே, பாட்டாளி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பொதுத்துறை தொழிலாளர்களும் தங்களின் ஒருநாள் ஊதியத்தையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தையும் நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கடந்த நவம்பர் 20 ஆம் தேதியே அறிவித்திருந்தேன். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அனைத்து பொதுத்துறை நிறுவன நிர்வாகத்திடமும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் வழங்கிவிட்டனர். ஆனால், நவம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதி பிடித்தம் செய்யப்படவில்லை.
தமிழக அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிதியாக பெற்றால் சுமார் ரூ.230 கோடி கிடைக்கும். இது நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதியக் கொடையை பெற்றுக் கொள்ள அரசு மறுக்கிறது. இது ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது. இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் அரசு – பொதுத்துறை ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நிவாரண நிதி வழங்கும்படி தமிழக மக்களுக்கும், பிற மாநில ஆட்சியாளர்கள் மற்றும் மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் வீடுகள் மழை&வெள்ளத்தில் சிக்கி பெருமளவில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர். கடந்த 1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழக அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரும் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் வெள்ள முன்பணமாக (Flood Advance) வழங்கப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தவணை முறையில் பிடித்தம் செய்யப்பட்டது. அதேபோல், இப்போதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக அரசு வழங்க வேண்டும்.