தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
தனி நீதிபதி எஸ் எம்.சுப்பிரமணியத்தின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு ஸ்டாலின் தரப்பு வக்கீல் ஆஜராகி முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டனர்.




