
“இது போல பல சிறப்பம்சங்களை ரபேல் கொண்டுள்ளது. ரபேல் கண்டிப்பாக நமது விமானப்படைக்கு அளவற்ற ஆற்றலை வழங்கும். இருப்பினும், 36 விமானங்கள் என்பது குறைவான எண்ணிக்கையே. ரபேல் விமானங்கள் 2040வரை பிரான்சின் முன்னணி தாக்கும் விமானமாக இருக்கும்”
இன்று ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நாடாளுமன்றத்தில் துவங்கிய பேச்சுகள் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கேட்கப்பட்டு, ராகுல் காந்தி ரபேல் காந்தி ஆகியுள்ளார். இந்த வகையில் இந்த விமானம் குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர். அப்படி என்ன இதில் சிறப்பு என்று கேட்பாரும் உண்டு. அதற்காக இந்தச் சிறிய அறிமுகக் கட்டுரை… ரபேல் விமானம் பற்றிய சுவாரசிய தகவல்கள்!
இந்தியா பிரான்சின் டஸ்ஸாலட் நிறுவனத்துடன் 36 ரபேல் விமானங்கள் வாங்க ஆர்டர் செய்திருந்தது. இதில் முதல் விமானம் தான் தற்போது தனது முதல் பறப்பை மேற்கொண்டது. இதில் முதல் விமானத்தின் எண் RB008 என குறிக்கப்பட்டுள்ளது. இது போல எட்டு இரு இருக்கை விமானங்களுக்கும் RB001 முதல் RB008 வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர மற்ற 28 ஒற்றை இருக்கை விமானங்களுக்கு BS001 முதல் BS028 வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நமது விமானப் படை தளபதி பிஎஸ் தனாவோ மற்றும் பயிற்சி கட்டளையக தலைவர் ராகுல் பகுதாரியா அவர்களின் முதல் எழுத்துக்களாகும்.

கடந்த செப்டம்பர் 22 அன்று ஏர்மார்ஷல் ரகுநாத் நம்பியார் ரபேல் இரு இருக்கை விமானத்தை இயக்கி சோதனை செய்து பறந்து வந்தார். ” இது ஒரு நல்ல விமானம்.இதில் பறந்தது திருப்தியாக இருந்தது” என அவர் பறந்த பிறகு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்திய விமானப் படையின் நான்கு நபர்களைக் கொண்ட திட்ட மேலாண்மைக் குழு கடந்த ஒரு வருடமாக பிரான்சில் தங்கா ரபேல் தயாரிப்பு மற்றும் இந்தியாவிற்கேற்ற மாற்றங்கள் குறித்து கண்காணித்து வருகிறது.
முதல் விமானம் பறந்த பிறகு மேலும் சில சோதனைகளுக்கு பிறகு 2019 செப்டம்பர் மாதம் முதல் விமானம் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும் என்று தெரிகிறது. இத்துடன் தேவையான ஆயுதங்கள் மற்றும் மற்ற தளவாடங்கள் 2019 முதல் இந்தியா வரும். ஏப்ரல் 2022ல் மொத்த விமானங்களும் இந்தியா வந்தடையும்.
இந்தியா பிரான்சின் ரபேல் விமானத்தை அப்படியே வாங்க வில்லை. அதில் பல மாற்றங்களைக் கேட்டுள்ளது. அதன்படி இந்தியாவிற்கு வரும் ரபேல் விமானங்கள் இந்திய நிலைக்கு ஏற்றபடி மாற்றங்கள் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட 13 விதமான மாற்றங்களை இந்தியா இதில் கோரிப் பெற்றுள்ளது.
தலைக் கவச மின்னணு டிஸ்பிளே, குறை பேன்ட் ஜாமர், மேம்படுத்தப்பட்ட ரேடார், ரேடியோ அல்டிமீட்டர், டெக்காய் அமைப்பு மற்றும் உயரத்தில் உள்ள விமானத் தளத்தில் இருந்து இயக்குவதற்கேற்ற திறன் உள்ளிட்ட சில மாற்றங்களை இந்தியா கேட்டுள்ளது.
ரபேல் விமானத்தின் சிறப்பு
ரபேல் விமானம் பற்றிய மிகச் சிறப்பான விஷயம் என்னவெனில் அது பல போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே. ஆப்கனில் தாலிபான்களை வீழ்த்த நேட்டோ படைகள் போரிட்ட போதும், ஈராக்கிலும் சரி லிபியாவின் சிவில் போரிலும் சரி மாலியில் பிரஞ்சு படைகளின் தாக்குதலிலும் சரி ரபேல் விமானம் பல துல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடைசியாக ஐஎஸ் படைகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் குண்டு மழை பொழிந்தது. பலவித வான் பாதுகாப்பு அமைப்பு களையும் தாண்டி இதை சாதித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
ரபேல் இரு என்ஜிகள் , டெல்டா இறக்கை அமைப்பு கொண்ட பல பணி தாக்குதல் விமானம் ஆகும்.
19 மார்ச் 2011ல் ரபேல் போர் விமானங்கள் லிபியாவின் மேல் உளவு மற்றும் தாக்குதல் பணியில் ஈடுபட்டது. ஆபரேஷன் ஹர்மட்டன் என்னும் பெயரில் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளில் பெங்காசியை சுற்றி இருந்த ஆர்டில்லரிகளை தாக்க ரபேல் விமானங்கள் சென்றன.
அதாவது எந்த வித SEAD எனப்படும் Suppression of enemy air defence விமானத்தின் துணை இல்லாமல் ரபேலை வெற்றிகரமாக இயக்க முடிந்தது. அதற்குக் காரணம் ரபேல் தன்னகத்தே கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரா தன்பாதுகாப்பு அமைப்பு தான்.
இது போல பல சிறப்பம்சங்களை ரபேல் கொண்டுள்ளது. ரபேல் கண்டிப்பாக நமது விமானப்படைக்கு அளவற்ற ஆற்றலை வழங்கும். இருப்பினும், 36 விமானங்கள் என்பது குறைவான எண்ணிக்கையே. ரபேல் விமானங்கள் 2040வரை பிரான்சின் முன்னணி தாக்கும் விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

கட்டுரையாளர்: லெப் கலோ ஸ்ரீராம் குமார்
கோவில்பட்டியில் 1981ல் பிறந்தவர்! உடுமலைப்பேட்டை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் படிப்பினை முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி 2004ல் 90வது மீடியம் ரெஜிமென்டில் இணைந்தார். பின் 2008ல் மேஜராக பதவி உயர்வு பெற்றார். 2009ல் அசோக சக்ரா விருது பெற்றவர்.



