ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது.
ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக 5 லட்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. தற்போது 15 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, அஸ்டர், சால்வியா, அந்தூரியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. நாளை தொடங்குகிறது இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி அண்ணா பூங்காவில் நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 8 நாட்கள் விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி அண்ணா பூங்காவில் நாளை காலை 10 மணிக்கு கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கலையரங்கத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முன்னதாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாம்பழங்கள் சேலம் என்றால் மாம்பழம் என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. அந்த சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏற்காட்டில் நடைபெறும் கோடை விழாவில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 ரகங்களில் மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. மலர் கண்காட்சியில் சுமார் 5 லட்சம் மலர்களை கொண்டு வள்ளுவர் கோட்டம், மேட்டூர் அணை, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பு வகையில் மாட்டு வண்டியில் காய்கறி போன்ற மலர் அலங்காரங்கள், பட்டாம்பூச்சி வடிவில் செல்பி பாயிண்ட், குழந்தைகளை கவரும் வகையில் ஜின்ஜாங் உருவம், மகளிருக்கான இலவச பஸ் வசதி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான வடிவம் ஆகியவை இடம்பெற உள்ளது. மேலும் 46 வகையான பழங்களால் ஆன உணவு பொருட்கள் விற்கப்பட உள்ளன. கோடை விழாவையொட்டி அண்ணா பூங்கா மற்றும் ஏரி பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் செலவில் அண்ணா பூங்காவில் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு செடிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பூங்காவுக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்ல தனிப்பாதையும் அமைக்கப்படுகிறது. மேலும் மலர் அலங்காரம் செய்வதற்காக ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் ரோஜா மலர்கள் இன்று ஏற்காட்டுக்கு கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


