spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம சென்னை சுற்றுலா: திருப்போரூர் கந்தசாமி கோயில்!

நம்ம சென்னை சுற்றுலா: திருப்போரூர் கந்தசாமி கோயில்!

- Advertisement -
thiruporur kandaswamy temple

பகுதி 5 – திருப்போரூர் கந்தசாமி கோயில்

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு, 100 அடி ரோடு வழியாக வேளச்சேரியை அடைந்து, அங்கிருந்து NIOT சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி ராஜீவ்காந்தி சாலையை அடைய வேண்டும். பின்னர் காரப்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர், கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் சென்றடைந்தோம். சுமார் 40 கிலோமீட்டர் தூரம்; ஒரு மணிக்குச் சற்று அதிகமான பயணநேரம். சுமார் எட்டு மணிக்கு கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்த நாள் அதிகம் கூட்டம் இல்லாத நாள். எனவே எங்களுடைய கார் கிட்டத்தட்ட கோவில் வாசலுக்கே வந்தது.

          முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

          அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. நாங்கள் சென்ற வழியில் திருப்போரூருக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஊர் உள்ளது. அதைக் கடந்துதான் திருப்போரூர் செல்லவேண்டும்.

          யுத்தம் நடந்த இடமாதலால் இதற்கு யுத்தபுரி, சமராபுரி, போரூர் எனப் பெயர் வந்தது. சமராபுரி வாழ் சண்முகத்தரசே நினைவுக்கு வருகிறதா? விக்ரம் நடித்த கந்தசாமி என்ற திரைப்படம் இந்த ஊரின் திருக்கோயிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படத்தில் சென்னை அடையாரிலிருந்து படகில் வருவது போலக் காட்சிகள் வரும். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மக்கள் படகு மூலம், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக  திருப்போரூர் வந்திருக்கிறார்கள்.  இப்போது நல்ல பெருந்து வசதி உள்ளது.

          திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோயிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் இங்கு அமைந்துள்ளது. ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோயில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துவா அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

          மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார்.

          அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோயில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும்.

          ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு  அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும்.

          முருகப் பெருமான் இங்கு பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார். ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

          கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலின் ஸ்தல மரம் வன்னி மரம் ஆகும். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

          ஆனால் இங்கே பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு முறையான தங்கும் வசதி இல்லை; கழிப்பறைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவை கட்டப்பட்டன; ஆயினும் இன்னும் திறக்கப்படவில்லை.           நாங்கள் கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு 0845க்குப் புறப்பட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe