spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம ஊரு சுற்றுலா: வடசென்னைய வந்து பாக்கலாமா?!

நம்ம ஊரு சுற்றுலா: வடசென்னைய வந்து பாக்கலாமா?!

- Advertisement -
north chennai trour

வடசென்னை சுற்றுலா

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மன அமைதி வேண்டும் போதெல்லாம் ஆலயங்களுக்குச் செல்வது என் வழக்கம். அலுவலகத்தில் ஓயாத வேலை, வீட்டில் மனைவியுடன் கருத்து வேறுபாடு, குழந்தைகள் பள்ளித் தேர்வுகள் முடித்து ரிலாக்ஸ் செய்ய விரும்புகிறார்கள் என ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதுமானது. உடனே வடசென்னை சுற்றுலாவுக்குக் கிளம்பிவிடுவோம். பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னால் எனக்குத் தெரிந்த மாணவர்களை அவர்களது பெற்றோர்களுடன் ஏதாவது ஒரு சரஸ்வதி ஆலயம் அல்லது ஹயக்ரீவர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வது ஒரு வழக்கம். அந்த வகையில் சென்ற ஒரு சுற்றுலா, இந்தத் தொடரில் இப்போது எழுதப்போகிறேன்.

          பயணத்திட்டம் என்னவென்றால், பெரம்பூர் நரமுக விநாயகர், மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ஹர் கோயில், பெரிய பாளையம் பவானியம்மன் கோயில், ஆத்துப்பாக்கம் சரஸ்வதி கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், ஆனந்த ஷிர்தி சாயி பாபா கோயில், ஞாயிறு சூரியனார் கோயில், ஶ்ரீ சீதா சமேத ஸ்ரீ கல்யாணராமர் ஆலயம், தேவதானம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று வருவது.  

          என்னுடன் வரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தவேரா கார் அல்லது மஹிந்த்ரா வேன் வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். தின்பதற்கு முறுக்கு, தட்டை, கடலை மிட்டாய், பிஸ்கட்டுகளாகியவை, குடிநீர் ஒரு கேன் ஆகியவை எடுத்துக்கொள்வோம். காலை 0530 மணிக்கு கிளம்பிவிடுவோம்.

          முதலில் பெரம்பூர் நரமுக விநாயகர் கோயில். இது ஒரு கோயில் அல்ல. சாலையோரம் இருக்கின்ற ஒரு பிள்ளையார். அண்மையில் இதற்கு லைட் ரூஃபிங்க் ஷெட் போட்டிருக்கிறார்கள். நல்ல வண்ணமயமான களிமண் விநாயகர் பொம்மை. பெரம்பூரிலிருந்து மத்திய சென்னை நோக்கி வரவேண்டுமென்றால் இந்தப் பிள்ளையாரைக் கடந்து இரயில்வே கீழ்ப்பாலம் வழியாக வரவேண்டும். எனவே அந்த வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் அல்லது ஆட்டோவில், காரில் செல்பவர்கள் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போவார்கள். காலில் செருப்பு அணிந்திருந்தாலும் இங்கே நின்று விநாயகருக்கு கும்பிடு போடுவது நிற்காது.

படம் 1: சென்னை, பெரம்பூர் நரமுக விநாயகர்

          நான் எங்கு வெளியூர் சென்றாலும் இந்த விநாயகர் அருகே வண்டியை நிறுத்தி வணங்கிவிட்டு, அவருக்கு ஒரு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு, உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டுத்தான் வெளியில் செல்வேன். நரமுக கணபதி என்று பெயர்தானே ஒழிய கணபதி யானை முகத்தோடு காட்சியளிப்பார். உட்கார்ந்த நிலையில் சுமார் 4 அடி உயர, வண்ணச் சிலை. பெரம்பூரின் இரயில்வே கீழ்மட்ட பாலச் சாலை தொடங்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இப்போது முரசொலி மாறன் மேம்பாலம் கட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் இன்றும் இந்த தரைப்பாலத்தின் வழியாகச் செல்கிறார்கள். இந்த நரமுக கணபதியை வணங்கித்தான் செல்கிறார்கள்.

          இந்த சுற்றுலாவிலும் முதலில் நரமுக கணபதியைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து மூலக்கடை மாதவரம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (வட கிராண்ட் ட்ரங்க் ரோட்டில்) ஓரிடத்தில் இடப்புறம் திரும்பி பொன்னியம்மன்மேட்டில் இருக்கின்ற ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ஹர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் இருக்கிறார். அவரைத் தரிசிப்பதுதான் நோக்கம். இருந்தாலும் உடல், மனம் ஆகியவற்றில் ஏற்படும் சகல ரோகங்களையும் தீர்க்க வல்லவர் ஸ்ரீ நரசிம்ஹர் என்பதால் எங்கள் பயணத்திட்டத்தில் இக்கோவில் ஒரு அங்கமாகிறது. கோயிலில் நுழைந்ததும்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்|
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்||

என்ற ஸ்லோகத்தை முணுமுணுத்தவாறே கோயிலை வலம் வந்தோம்.

          இப்பகுதியில் வசித்து வந்த ஸ்ரீ கணபதி நாயக்கர், ஸ்ரீமதி நவநீதம்மாள் ஆகியோரின் கனவில் தோன்றி இறைவன் இங்கே கோயில் எழுப்புமாறு வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி அவர்கள் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் எனவும் மக்கள் கூறுகிறார்கள். கணபதி நாயக்கர், நவநீதம்மாள் இருவருடைய மண்ணால் செய்யப்பட்ட வண்ணச் சிலை ஒன்று கோயிலில் உள்ளது.

படம் 2: பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ஹர்

          ஸ்ரீ கல்யாண நரசிம்மர் நின்ற கோலத்திலும், கமலவல்லித் தாயார் அமர்ந்த கோலத்திலும் காணப்படுகிறார். சுவாமிக்கு எதிரே சிறிய கருட மண்டபம் உள்ளது. வெளியில் பிரகாரத்தில் சுதை சிற்பமாக ஸ்ரீ ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ சுதர்சன ஆழ்வார், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோருக்குத்  தனிச் சன்னிதிகள் உள்ளன. விநாயகர், பால முருகன் மூர்த்தங்களும் உள்ளன.

மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே — என வேண்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe