
5. ஆத்துப்பாக்கம் சரசுவதி ஆலயம்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பெரியபாளையம் கோவிலில் இருந்து வெளியில் வந்து பிரதான சாலையில் ஒரு தேநீர்க்கடையில் அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது மணி காலை 0830. ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயில் அங்கிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். இது ஒரு தனியார் கோயில்.
வடசென்னைப் பகுதிகளில் இருந்து, குறிப்பாக பெரம்பூர், மாதவரம் பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களுக்கு முன்னால் ஒரு வேனில் உணவுப் பொருட்கள், அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் மற்றொரு குழு செல்லும். பாதயாத்திரை வருபவர்களுக்கு காலை, மதியம், இரவு என உணவு அளிப்பது இவர்களின் பணி. இவ்வாறு யாத்திரிகர்களுக்கு சமைத்துப்போடும் ஒரு இடமாக இந்த சரசுவதி கோயில் இருந்திருக்கிறது.
சமையல் செய்யத் தேவையான இடம், சுமார் 50 அல்லது 60 பேர் சாப்பிட ஒரு கூடம், கழிப்பறைகள், குளியலறைகள், தண்ணீர் வசதி அனைத்தும் இங்கே உள்ளது. அதோடு ஒரு சரசுவதி கோயிலும் இருக்கிறது. சரசுவதி சன்னிதிக்கு எதிரே சுமார் 50 பேர் அமர்ந்து பூஜை அபிஷேகங்களைக் காண ஒரு கல் மண்டபமும் கட்டியிருக்கிறார்கள். நான் அந்தக் கோயிலுக்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன். என்னுடன் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் வருவார்கள். என் குடும்பத்தினரும் வருவார்கள். இரண்டு நாட்கள் முன்னதாக கோயிலுக்குச் சென்று நாங்கள் வரப்போவதைச் சொல்லி அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வோம். நைவேத்தியத்திற்கு இரண்டு வகை சாதம் பிரசாதமாகச் செய்யச் சொல்லுவோம்.
அச்சமயத்தில் அங்கே ஒரு இளவயது அர்ச்சகர் இருந்தார். அந்த அத்துவானக் காட்டில் அவர் தனது மனைவி, கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அருகில் வீடுகள் கிடையாது; வீடு, கடைகள் எல்லாம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால்தான் இருக்கும். இருந்தாலும் அந்த இளைஞர் கடவுளுக்குச் சேவை செய்து வந்தார்.
நாங்கள் சென்றதும் கோயிலை சுத்தம் செய்வோம். கோயில் சுத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் வெட்ட வெளியில் இருப்பதால் தூசு, இலை தழைகள் சிதறிக்கிடக்கும். மாணவர்கள் ஆர்வமாக இந்த சுத்தம் செய்யும் வேலையைச் செய்வார்கள். அர்ச்சகர் அபிஷேகம் செய்யும்போது, சரசுவதி, அம்பாள் ஸ்லோகங்கள், பாடல்கள் எல்லாம் பாடுவோம். பூஜை முடிந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து அர்ச்சகர் ஆசீர்வாதம் செய்து பிரசாதம் தருவார். பள்ளியிறுதித் தேர்வில் நன்றாகத் தேர்வு எழுதுமாறு வாழ்த்துவார்.
பின்னர் அனைவரும் அமர்ந்து சக்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாதம், புளிசாதம் போன்ற பிரசாதங்களை உண்போம். குளியலறை, கழிப்பறை எல்லாம் இருப்பதால் சவுகரியம். அர்ச்சகருக்கு சம்பாவனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சிறுவாபுரி முருகனைத் தரிசிக்கச் சென்றோம்.