பத்தனம்திட்ட: நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல முயலும் பெண்ணை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றார்கள் ஐயப்பப்படையினர்.
சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை மறித்து கேரள பெண்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஒரு தரப்பு பெண்கள் செல்ல மாட்டோம் என்றும், மற்றொரு தரப்பினர் சபரிமலை செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பெண்களை அனுமதிக்க கேரள மக்கள், அங்குள்ள பாஜக.,வினர் விரும்பவில்லை. இருப்பினும் அரசு தரப்பில் பெண்களை அனுமதிக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளார். இதனால் இரு தரப்பு மோதலாக இது உருவெடுத்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் முதல்வர் பிணரயி விஜயன் கூறியபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர மாட்டோம். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இந்நிலையில் மாதப் பிறப்பு நாளை ஒட்டி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதை ஒட்டி, பக்தர்கள் வரத் தொடங்கி உள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்னிட்டு, பெண் பக்தர்களும் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். ஆனால், நிலக்கல் பகுதியில் வந்து குவியும் அந்தப் பெண்களை கேரள பெண் பக்தர்கள் சிலர் அணுகி, அவர்களை மலைக்குச் செல்ல வேண்டாம் என வற்புறுத்தி வருகின்றனர்.
கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!
இதனிடையே செய்தி சேகரிப்பதற்காக வந்த கேரள ஊடகத்தைச் சேர்ந்த இளம் பெண்களையும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி, பம்பைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.