பாரீஸ்: ஜெர்மன் விமான விபத்து தொடர்பாக ஜெர்மனி போலீசார் அதன் துணை விமானி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் துணை விமானி லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அதில், முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர்பஸ் ஏ-320 விமானம், கடந்த 24-ஆம் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது. பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி ஒன்று மலைப் பகுதியில் மீட்கப்பட்டது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவி பதிவுகள் ஆராயப்பட்டன. அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறைக் கதவைத் தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புலன் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவைத் தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன் பின்னர் கதவை வலுவாகத் தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன் பின் எந்த பதிலும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது” என்று கூறியுள்ளார். இதனை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்த யூகம் இல்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காஸிநியூவ் கூறியுள்ளார். என்ன நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது என்றாலும், நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி இருக்காது என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த விமானத்தின் துணை விமானி ஆன்ட்ரூஸ் லூபிட்ஸ் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள மான்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டார்ப் நகரிலும் அவருக்கு ஒரு அபார்ட்மென்ட் இருந்துள்ளது. அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். ஜெர்மனி போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த லுபிட்ஸுக்கு தீவிரவாதிகளுடன் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஜெர்மன் விமான விபத்து: துணை விமானி வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari