ராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது!

Published:

Mahathir Mohamad - 2026

மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதிர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மகாதீர் முகமதின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி, மக்கள் நீதிக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையுடன் 94 வயதான மகாதிர் முகமது கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார்.

இந்த நிலையில், மலேசியாவில் தற்போது ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை தன்னிடம் வழங்குவதாகக் கூறிய மகாதிர் முகமது, தான் கொடுத்த உறுதிமொழியை மீறிவிட்டார் என்றும், தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் மக்கள் நீதிக் கட்சித் தலைவர் அன்வர் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். நேற்று ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதை அடுத்து தங்கள் ஆதரவாளர்களுடன் இரு கட்சிகளின் தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவினை மகாதீர் முகமது எடுத்துள்ளார். இதை அடுத்து அவர் இன்று மதியம் 1 மணி அளவில் யங் டி பெர்டான் அகோங்குக்கு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தாக தகவல்கள் வெளியாகின. இதனை பிரதமர் அலுவலகமும் இன்று உறுதி செய்தது.

மகாதிர் முகமதுவின் ராஜினாமா குறித்து மலேசிய அரசுத் துறை வட்டாரங்கள் குறிப்பிட்ட போது, கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், மகாதிருக்கு பெரும் மன வருத்தத்தை அளித்துள்ளதாகவும், தனது கட்சி தலைவர்கள் செயல்பாடுகளே அவருக்கு சோர்வைத் தந்ததாகவும் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பு இது குறித்துக் கூறிய போது, பகாதன் ஹராபன் பிரதமர் பதவியிலிருந்து விலகி விட்டு, புதிய கூட்டணியில் இருந்து தாம் மீண்டும் பிரதமர் ஆகும் முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என்று கூறப் படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மலேசியாவின் எட்டாவது பிரதமர் ஆக மீண்டும் மகாதிர் பதவிஏற்கலாம். அவர் நான்காவது பிரதமராக 1981இல் இருந்து 2003 வரை பதவி வகித்தார். பின்னர் ஏழாவது பிரதமராக 2018இல் இருந்து இன்று வரை பதவியில் இருந்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்நிலையில் மகாதிரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும், மலேசியாவின் இடைக்கால பிரதமராக மகாதிர் முகமது நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும், புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை அவர் இதில் தொடர்வார் என்றும் அரசு தலைமைச் செயலர் முகமத் ஜுகி அலி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசிய நாடாளுமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க அவர் வழி கோரலாம் அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு வழி ஏற்படுத்தலாம் என்றும் கருத்துகள் உலா வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img