அன்று வேண்டுமென்றே… இன்று இயலாமையால்..! சீனா வைரஸ் பரவலுக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்!

உலகம் சற்றுமுன்
trump and xi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் மீண்டும் சீனா குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உலக அளவில் கொரோனா வைரஸால் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகி தடுமாறியிருக்கும் நாடு அமெரிக்கா. எனவே இந்த வைரஸ் தொடக்கம் குறித்து ஒவ்வொரு நாளும் டிரம்ப் சீனா குறித்து எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

சீனாவின் இயலாமையாலும் தகவலின்மையாலும்தான் உலக அளவில் பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் சீனாவில் உயிரி ஆயுத பரிசோதனைக் கூடம் உள்ள வூஹான் நகரில் இருந்து வெளியே பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இன்று உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வருகிறது. இதுவரை 50.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 3.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது அமெரிக்கா. இங்கே கொரோனா தொற்றுக்கு 15.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 3.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் அதிக அளவிலான மரணங்கள் அமெரிக்காவில் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் மீது பாய்ந்து வருகிறார் டிரம்ப். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. சீனா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது என்றாலும், கோவிட் 19 என்பதை சீன வைரஸ் என்றே அமெரிக்கா இன்னமும் கூறி வருகிறது.

இந்நிலையில் இன்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து… ‛வேறொன்றும் இல்லை. சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இந்த பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன… அவர்களால் எளிதில் இதனைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீனாவின் சார்பில் பேசிய அதன் தொடர்பாளர், முட்டாள்தனமாகப் பேசியுள்ளார். உலகம் முழுதும் அவர்களின் நாடு பரப்பி விட்டுள்ளதை வேண்டுமென்றே திசைதிருப்பி யுஎஸ் மற்றும் ஐரோப்பா மீது பிரசார தாக்குதலை நடத்துவது வலியை ஏற்படுத்துகிறது… என்று பதிவிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.