
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்: பகுதி: 7
“இறைவனை என்றும் நினையுங்கள்”
– மீ.விசுவநாதன்
பகவான் கீதையில் ஒருவார்த்தை சொன்னார்,” எவன் தனது கடைசி நேரத்தில், அதாவது தனது பிராணன் போகும் நிலையில் எந்த விஷயத்தை நினைத்துப் பிராணனை விடுவானோ அவன் அதையே அடைவான்”. அந்தக் கடைசி நேரத்தில் பகவானையே நினைத்து நாம் பிராணனை விட்டால் பகவானுடைய ஸாந்நித்யம் நமக்குக் கிடைக்கும்.
இதைச் சொன்னால் அநேகம் பேருக்கு மனசிலே என்ன பாவனை வருகிறதென்று கேட்டால் “கடேசி நேரத்தில் பகவானை நினைத்தல் போதும் இல்லையா? ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அந்தக் கடேசி நேரத்தில் நினைத்தால் ஸாயுஜ்யம் வந்து விடுகிறது. இப்போது எங்களை நிர்ப்பந்தப் படுத்தாதீர்கள்” என்று சிலர் சொல்லுவார்கள்.
ஆனால் உங்களுக்கு இன்று முதல் அந்த அப்பியாசம் இல்லாவிட்டால் கடேசி நேரத்தில் திடீரென்று பகவானுடைய நினைவு வருமா என்று கேட்டால், கண்டிப்பாக வராது. அதற்காகத்தான் சொல்லுகிறோம். ” எப்போதுமே பகவானுடைய நினைவிலேயே இரு. அந்த அப்பியாச பலத்தினாலே கடேசி நேரத்தில் பகவானுடைய நினைவு உனக்கு வரும். அதை இன்று முதல் அப்பியாசம் செய். பகவானை நினைத்திரு. ஒவ்வொரு வார்த்தையிலும் பகவானை ஞாபகம் வைத்துக்கொண்டு அப்பியாசம் செய்தால் கடேசி நேரத்தில் பகவான் சிந்தனை உனக்கு வரும்” அதனால் பகவத்பாதர் சொல்கிறார்,
“கேயம் கீதா நாம ஸகஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம்”
“பகவானுடைய நாமத்தைச் சொல்லு. பகவானுடைய முகார விந்தத்தினால் உண்டான கீதையைப் படி. பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை, திவ்யமங்கள ரூபத்தை மனதில் நினைத்துக்கொள். இதுதான் உன்னுடைய ஜன்மத்தை ஸ்ரார்தகப் படுத்திக் கொள்வதற்கும், நீ விரும்பக்கூடிய சுகத்தை அடைவதற்கும் உரிய வழி. இதை விட்டால் வேறு வழி இல்லை. லௌகிகம் இருக்கவே இருக்கிறது. அதில் என்ன நடக்கிறதோ நடக்கிறது.
ஆனால் அதுதான் என்னுடைய ஜீவன லக்ஷ்யம் என்று நினைக்காதே. இந்த லௌகிக விஷயங்கள் உன்னுடைய ஜீவனத்துக்கு லட்சியமில்லை. ஜீவன லக்ஷ்யம் என்பது பரமாத்மாவினுடைய ஸாயுஜ்யத்தை அடைவது. அதற்கு முயற்சி செய்.” என்றார். ஆகையால் எல்லோருக்கும் சுகம் வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று சொன்னால் பகவானுடைய ஸ்மரணம், பகவானுடைய சிந்தனம், பகவானுடைய சேவை ஆகியவைதான் மார்க்கம். எல்லோரும் அந்த மார்க்கத்தை ஆசரித்துத் தங்களுடைய ஜன்மத்தை தன்யமாக்கிக் கொள்ள வேண்டும்.
“ஹரநம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவ
ஜானகீகாந்தஸ்மரணம் ஜய ஜய ராம ராம”
(சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் “ஆசார்யாளின் பொன்மொழிகள்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது)
“குருபக்தி மகிமை “

சிருங்கேரி ஸ்ரீ ஆசார்யாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட எத்துணையோ கோடானு கோடி பக்தர்களில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசித்து வருகின்ற வக்கீல் ஸ்ரீமான் தியாகராஜன் அவர்களும் ஒருவர். அவருக்கு இன்று (20.05.2020) சுமார் எண்பத்தி மூன்று வயதிற்கு மேல் இருக்கும். அவருக்கு எத்துணை இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அவர் வாயிலிருந்து இயல்பாக “ஸ்ரீ ஸத்குரோ பாஹிமாம், ஸ்ரீ சாராதே ரக்ஷமாம்” என்ற நாமம்தான்.
அவரை நேரில் சந்திக்கும் போதெல்லாம்,” விச்சு … ஸ்ரீ ஸத்குரோ பாஹிமாம், ஸ்ரீ சாராதே ரக்ஷமாம் சொல்லு” என்றுதான் பேசவே ஆரம்பிப்பார். அடுத்த கேள்வி,” சமீபத்துல நீ எப்ப ஆசார்யாள தர்சனம் பண்ணினாய்…அடிக்கடி சிருங்கேரிக்குப் போகணும், ஆசார்யாள தர்சனம் பண்ணனும்” என்பதாகத்தான் இருக்கும்.
வக்கீல் ஸ்ரீமான் தியாகராஜன் அவர்களை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு அடியேனுக்கு 1986ம் வருடம் சிருங்கேரி ஆசார்யர்கள் சென்னைக்கு விஜய யாத்திரையாக வந்த நேரம். இராஜா அண்ணாமலைபுரத்தில் நவசுஜாவில் இரவில் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் ஸ்ரீ சாரதா ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜை செய்யும் பொழுதுதான். அன்று ஸ்ரீமான் தியாகராஜ மாமாவின் அருகில்தான் அமர்ந்திருந்தேன்.
பூஜை முடிந்தவுடன் ஸ்ரீ ஆசார்யாள் எழுந்து வந்து அன்று இரவில் பாத பூஜை செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள். அப்படித்தான் அன்றும் நடந்து முடிந்து ஸ்ரீ ஆசார்யாள் பக்தர்களை நோக்கி தனது வலது கையை உயர்த்தி ஆசி வழங்கும் நேரம் ,” தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகராஜ்”கு “ஜெய்” என்று கம்பீரமாகக் குரல் கொடுக்க, அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் “ஜெய்” என்று பதில் கோஷம் கொடுத்தார்கள். அடியேனும் ” ஜெய்” என்று குரல் கொடுத்தேன்.
உடனே அவர் என்பக்கம் திரும்பி,” ஏய் அம்பி… தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகராஜ்”கு “ஜெய்” என்று உரக்கக் கோஷம் போடு. கூச்சப் படாதே…நம்மோட இந்தக் குரல் குருநாதரின் நாமத்தைச் சொல்லத்தான் இருக்கு” என்று என்னை ஊக்கப் படுத்தினார். உனக்கு எந்த ஊர் என்றார். சொன்னேன். தினமும் பூஜைக்கு வா என்றார்.
பிறகு ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ஆசார்யாளின் பூஜை முடிந்ததும் அவரது அருகில் தயாராக என்னையும் நிற்கச் சொல்லி, குருநாதரின் நாமத்தை உரக்கத் தானும் சொல்லி, என்னையும் சொல்லத் தயார் செய்து விட்டார்.
இன்றும் வீட்டில் அடியேன் ஸ்ரீ ஆசார்யாளின் பூஜையை ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் காணும் போதும் மனத்திற்குள் உரக்க குருவின் நாமத்தை உச்சரிக்கத்தான் செய்கின்றேன்.

ஸ்ரீமான் தியாகராஜன் அவர்கள் பாடும் இன்னொரு நாமாவளி, “ஸச்சிதானந்த குரு ஸ்ரீ ஸச்சிதானந்தா, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்தா” என்பதாகும். ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளே ஒரு முறை, “ஒய்… ஸச்சிதானந்த குரு…இங்க வாரும்” என்று வேடிக்கையாக அழைத்து அவருக்கு பிரசாதம் அளித்ததை ஸ்ரீமான் ஆர். லெக்ஷ்மீவரஹ மாமாவும், ஸ்ரீமான் தியாகராஜ மாமாவுமே அடியேனிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்ரீ ஆசார்யாளின் மகிமைகளைப் பற்றி கூறினால் நேரம் போவதே தெரியாமல் தன்னை மறந்து கண்ணீர்மல்க, கைகள் தொழக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீமான் தியாகராஜ மாமாவுக்குத் தொண்டையில் குரல் எழும்பாமல் ஒரு நோய் வந்தது. அவரால் பேசவே முடியாது. அப்படியும் அவரை சந்திக்கும் பொழுது ஒரு காகிதத்தில் ,” ஆசார்யாள் காப்பாத்துவார்” என்று எழுதி, ” சொல்லு விச்சு” என்பார். அடியேனும் அவருக்காக மனமுருகிப் பிராத்தனை செய்வேன். அவரது பிராத்தனை பலித்தது.
ஒரு வருடத்திற்கு முன்பாக அவரை சென்னை, தி.நகர். வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் “ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில்” ஸ்ரீ ஆசார்யாளின் வர்த்தந்தி (பிறந்த நாள்) அன்று சந்தித்தேன். என்னை அன்போடு அழைத்துப் பேசினார். ஆம். பேசினார். “மாமா எப்படி இருக்கேள் என்றேன்”.
“நம்ம ஆசார்யாள் சிஷ்யாளுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார் விச்சு” என்று ஸ்ரீ சாரதாம்பாளையும், ஸ்ரீமாஹா சந்நிதானம், ஸ்ரீ சந்நிதானம் ஆகியோர்களின் படங்கள், பாதுகைகளையும் காட்டி, கைதொழுத படி அதே கோஷத்தை உரக்கச் சொல்லி என்னையும் சொல்ல வைத்தார்.
தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகராஜ்”கு “ஜெய்”.
(வித்யையும் விநயமும் தொடரும்)