மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்ட காலமாகும்: உலக சுகாதார நிறுவனம்!

உலகம் சற்றுமுன்
sowmiya-swamynathan

கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றல் ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ (மந்தைத் தடுப்பாற்றல்) மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஹெர்ட் இம்யூனிட்டி (Herd Immunity) முறை என்பது தொற்று நோய்க்கு எதிராக நோய்தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல் ஆகும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைபவர்கள் அந்த நோய் தடுப்பாற்றலை பெறுகின்றனர்.

தடுப்பூசி மூலம் நோய் தடுப்பாற்றல் பெறுவது மற்றொரு வகையாகும். இதன்மூலம் நோய்தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு தொற்று நோய் பரவுவது தடுக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க, நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க செய்வதே தீர்வாகும்.

இந்நிலையில் ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் லண்டனில் இருந்து அதன் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரசுக்கு எதிராக ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ எனப்படும் மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்டகாலமாகும். மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால்தான் ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம்.கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள 5 முதல் 10 சதவீத மக்கள் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள்.

மிக அதிகபட்சமாக சில நாடுகளில் 20 சதவீதம் மக்கள் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள். இயற்கையாக நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதற்கு நாடுமுழுவதும் நோய்த்தொற்று, அலை அலையாகப் பரவ வேண்டும்,

அதன்மூலம் தடுப்பாற்றல் கிடைக்கும். ஆனால், உலக சுகாதார அமைப்பின்படி, தடுப்பூசி மூலமே மக்கள் நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதுதான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும்.

எங்களின் கணக்கின்படி கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கான பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும்.

ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும். மக்கள் நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க தயாராக வேண்டும்.

உலகளவில் 200 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பல்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள். வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து மிகவேகமாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.