133 ரன்களில் இலங்கை ஆட்டமிழப்பு

உலகம்

south-africa-team உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 133 ரன்களில் ஆட்டம் இழந்தது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, துவக்கத்திலேயே முக்கிய இரு விக்கெட்களை இழந்து தவித்தது. பெரேரா 3 ரன் எடுத்த நிலையிலும், தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் திரிமன்னே சங்ககரா இணைந்து விளையாடினர். திரிமன்னே 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அனுபவ வீரர் சங்ககரா ஒருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் ஜெயவர்த்தனே இம்ரான் தாஹிர் பந்தில் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தஹிர் பந்தில் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 19 ரன்னில் டுமினியின் பந்தில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, கௌஷல், சமீரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் அற்புதமாக டிமினி ஹாட்ரிக் எடுத்தார். வெறும் 2 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இலங்கை இந்தக் கட்டத்தில் இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சில் 6 விக்கெட்டை இலங்கை அணி இழந்தது. 8 விக்கெட் இழந்த நிலையில் 116 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் தடுமாறிய இலங்கை அணிக்கு புத்துயிர் ஊட்ட இரு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் சங்ககரா. ஆனால் அவர் 45 ரன் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த அதே நொடியில், மைதானத்தில் வானம் பொத்துக் கொண்டு மழை பொழியத் துவங்கியது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் துவங்கியது. மலிங்கா தனது பங்குக்கு 3 ரன் சேர்த்தார். இந்நிலையில் அவர் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து, இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஆட்டம் இழந்தது. 134 ரன் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.