ஆஸி.,க்கு எதிராக… டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
natarajan
natarajan

சிட்னியில் நடந்த 2வது ‘டி-20’ போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியையும் தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தியது இந்திய அணி. இன்று, சிட்னியில் நடந்த இரண்டாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், மாத்யூ வேட், ஷார்ட் ஜோடி ரன் வேட்டையைத் தொடங்கியது. வேகமாக ரன்கள் சேர்த்த வேட் 25 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 32 பந்தில் 58 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் 22 ரன், ஸ்மித் 46, ஹென்ரிக்ஸ் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழந்து 194 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன் 2, சகால் 1, ஷர்துல் தாகூர் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

indianteam-t20

கடின இலக்கை நோக்கி துரத்திய இந்திய அணியில், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. ராகுல் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர், ஷிகர் தவான், கோலி இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். 35வது பந்தில் அரைசதம் அடித்த தவான், 52 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சாம்சன் 15 ரன் எடுத்தும், கோலி 40 ரன் எடுத்தும் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கேள்விக் குறியானது.

பின்னர் வந்த பாண்ட்யா அடித்து ஆடி நம்பிக்கை அளித்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது, கடைசி ஓவரில் 2 சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு ‘திரில்’ வெற்றி தேடித் தந்தார் பாண்ட்யா. அவர் 42 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். , ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நடராஜனின் துல்லிய பந்துவீச்சை புகழந்தார் பாண்ட்யா. நடராஜனின் துல்லிய பந்துவீச்சால் பத்து ரன்கள் வரை குறைவாக ஆஸி. அணி எடுத்தது. நமது சேஸிங் டார்கெட்டும் பத்து ரன்கள் வரை குறைந்திருந்தது என்று குறிப்பிட்டார் பாண்ட்யா. அவரே ஆட்டநாயகன் விருது பெற்றார்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து டி-20′ தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. முன்னதாக, ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸி பெற்ற வெற்றிக்கு பழி தீர்க்கும் வகையில் டி 20தொடரை இந்தியா கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.