
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நமது 4ம் நாள் ஆட்டத்தின் செய்திக் கட்டுரைக்குப் பின்னர், 5ம் நாளில் இரண்டு போட்டிகள் நடந்துள்ளன. இரண்டும் குரூப் எஃப் போட்டிகள். இந்தக் குழுவில் போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஹங்கேரி ஆகியவை ஆடுகின்றன. முதல் மூன்று, அடுத்த நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிகள்
(1) போர்ச்சுகலுக்கும் ஹங்கேரிக்கும் இடையில் புடாபெஸ்டாட் நகரில் இந்திய நேரப்படி 21.30 மணிக்கும்
(2) இரண்டாவது ஆட்டம் 16.06.2021 அன்று இந்திய நேரப்படி 00.30 மணிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இடையே மியூனிக் நகரிலும் நடைபெற்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற வெற்றி

புடாபெஸ்டில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அவர்களின் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் பணியைத் வெற்றிகரமாகத் தொடங்கியது.
ஆனால் இந்த ஆட்டம் 2016ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற சாம்பியன்களுக்கு சுலபமான ஆட்டமாக இருக்கவில்லை. இந்த ஆட்டத்தின் 84ஆவது நிமிடம் வரை 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் விளையாடிக்கொண்டிருந்தன. கோல் அடிப்பதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலையில் இருப்பது எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு மிகச்சிறந்த உற்சாகத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
36 வயதான, ரொனால்டொ புடாபெஸ்டில் ஆடுகளத்தில் இறங்கி இரண்டு கோல் அடித்ததன் மூலம் ஐந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய, அதிக கோல் அடித்த முதல் மனிதர் ஆனார். ரபேல் குரேரோவின் மகிழ்ச்சியான தொடக்க கோலுக்குப் பின்னர் இரண்டு முறை கோலடித்து ரொனால்டோ ஆட்டத்தை மாற்றினார். ரொனால்டோவின் முதல் கோல், ஒரு பெனால்டியில் வந்தது.
இரண்டாவது கோல் – எண் 11 – அவருக்கு வயதானாலும் ரொனால்டோவின் ஆட்டம் சோடைபோகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. ஹங்கேரிய கோல்கீப்பர் பீட்டர் குலாக்ஸியைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக 92ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். முதல் 84 நிமிடமும் போர்ச்சுகல் அணிக்கு இருந்த பதட்டத்தை 84ஆம் நிமிடம் ரபேல் குயிரெரோ அடித்த கோல் குறத்தது.
தன்னைத்தானே தோற்கடித்த ஜெர்மனி!

செவ்வாய்க்கிழமை இரவு யூரோ 2020இல் நடந்த குரூப் எஃப் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேட்ஸ் ஹம்மல்ஸ் சொந்த கோல் அடித்தார். அனுபவம் வாய்ந்த டிஃபன்ஸ் ஆட்டக்காரரான ஹம்மல்ஸ், லூகாஸ் ஹெர்னாண்டஸின் ஒரு க்ராஸ் ஷாட் பிரான்சின் கைலியன் பாப்பேவை அடைவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அந்தப் பந்து ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நியூயரைக் கடந்து கோலில் விழுந்தது. ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு இருந்தது; இல்கே குண்டோகன் முதல் பாதியில் ஜெர்மனியின் சிறந்த வாய்ப்பை வீணடித்தார்.
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் இரண்டு முறை கோல் அடித்தது. ஆனால் இரண்டு கோலும் அனுமதிக்கப்படவில்லை. கிரிக்கெட்டில் DRS முறை போல கால்பந்திலும் VAR முறை இந்த யூரோ 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த VAR முறையால் ஃபிரான்சின் இந்த இரண்டு கோல்களும் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் குழு நிலையில் ஜெர்மனி இதற்கு முன்பு ஒரு தொடக்க ஆட்டத்தைக்கூட இழக்கவில்லை. போட்டியில் வேறு சுவாரசியங்களும் இருந்தன.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒரு கிரீன்பீஸ் எதிர்ப்பாளர் மைதானத்திற்குள் பாராசூட் மூலம் குதித்தார். ஆட்டத்தின்போது ஜெர்மனி ஆட்டக்காரர் அன்டோனியோ, ஃபிரான்சின் ருடிகர் பால் போக்பாவைக் கடித்துவிட்டார். ஆனால் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இத்துடன் குரூப் ஆட்டங்களில் முதல் பகுதி முடிந்துள்ளது. அதாவது எல்லா அணிகளும் தலா ஒரு ஆட்டம் ஆடியுள்ளன.