டி20: அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா! திணறி வந்த தென் ஆஃப்ரிக்கா!

Published:

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி டி20 போட்டிகள் – 30.10.2021

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சனிக்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. இரண்டும் குரூப்1 ஆட்டங்கள். முதல் ஆட்டத்தில் இலங்கையும் தென் ஆப்பிரிக்க அணியும் ஷார்ஜாவில் விளையாடின. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள், துபாயில் விளையாடின. 

தென் ஆப்பிரிக்கா-இலங்கை

முதல் ஆட்டத்தில் பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை மட்டையாடச் சொன்னது. இன்றைய ஆட்டத்தில் க்விண்டன்-டி-காக் தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாடினார். இலங்கை அணியின் தொடக்க வீரர் ‘பதும் நிசாங்கா’ 58 பந்துகளில் 72 எடுத்து 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தவிர இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தவர்கள் சரித் அசலங்கா (21) மற்றும் அணித்தலைவர் தசுன் ஷங்கா (11) மற்றவர்கள் நிலைத்து நிற்கவும் இல்லை, ஓட்டங்கள் எடுக்கவும் இல்லை. எனவே இருபது ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன் எடுத்தது.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

தென் ஆப்பிரிக்க அணி இந்த இலக்கை மிகவும் சிரமப்பட்டு எடுத்தது. அணித்தலைவர் பவுமா 46 ரன் எடுத்தார். இருபதாவது ஓவரில் ஆறு பந்துகளுக்கு 15 ரன் எடுக்க வேண்டியிருந்தது. இலங்கையின் லஹிரா குமாரா பந்துவீச வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் மில்லர் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அதனால் 19.5 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் “வனிந்து ஹசரங்கா” இன்று ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அய்டன் மக்ரமை 15ஆவது ஓவரின் கடைசி பந்திலும், அதன் பின்னர் அவர் வீச வந்த 18ஆவது ஓவரில் முதலிரு பந்துகளில் பவுமா, பிரிடோரியஸ் ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்தப் போட்டியில் இது இரண்டாவது ஹாட்ரிக். அயர்லாந்து அணியின் ‘கர்டிஸ் கேம்ப்ஃபர்’ நெதெர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ந்து நாலு விக்கட் எடுத்தார். இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு ‘பிரட் லீ’ ஒரு ஹாட்ரிக் எடுத்திருக்கிறார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

குரூப் 1இல் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் நாலு புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கவும், ஆஸ்திரேலியாவும் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா

இரண்டாவது ஆட்டம் துபாயில் நடைபெற்றது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஆறு ஓவர்களான பவர்ப்ளேயில் ஆஸ்திரேலியா நாலு விக்கட் இழந்தது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய நால்வரும் ஆட்டமிழந்தனர். எனவே மீதமுள்ள வீரர்கள் மிக, மிக நிதானமாக ஆடினர். ஆரூன் ஃபின்ச் 19ஆவது ஓவரின் முதல் பந்தில் 44 ரன் எடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் எல்லா விக்கட்டுகளையும் இழந்து 125 ரன் எடுத்தது.

இந்தச் சுலபமான இலக்கை இங்கிலாந்து இரண்டு விக்கட் இழப்பிறகு 126 என்ற கணக்கில் 11.4 ஓவரில் எடுத்தது. ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் 72 ரன் எடுத்தார். மற்ற அணிகள் இருபது ஓவரில் 140 ரன்கள் எடுக்கத் தடுமாறும்போது இங்கிலாந்து 10 ஓவரில் 100 ரன் எடுக்கிறது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதிலிருந்து அந்த அணியின் ஆட்டத்திறன் என்ன என்பதை நாம் உணரலாம். ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். ஐந்து ஃபோர், ஐந்து சிக்ஸ் அவர் அடித்தார். இருப்பினும் நாலு ஓவர் வீசி, 17 ரன் கொடுத்து, மூன்று விக்கட்டுகள் எடுத்த கிரிஸ் ஜோர்டானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை இரண்டு குரூப் 2 பிரிவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தான் நமீபியா இடையே; இரண்டாவது ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தி-நியூசிலாந்து அணிகள் ஆடும் ஆட்டம்.

Related articles

Recent articles

spot_img