ஐ.சி.சி டி20 போட்டி – 05.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இரண்டு ஆடங்கள் நடந்தன. இரண்டும் குரூப் 2 பிரிவு ஆட்டங்கள். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும் நமீபியாவும் விளையாடின. இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தும் இந்தியாவும் விளையாடின.
நியூசிலாந்து – நமீபியா
நமீபியா பூவாதலையா வென்றது. முதலில் நியூசிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. நியூசிலாந்து அணி நிதானமாகத் தொடங்கி, சிறப்பாக ஆடிமுடித்தனர். அந்த அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு மட்டையாளர்களான க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நேஷம் ஆகிய இருவரும் தலா 39, 35 ரன்கள் எடுத்தனர். இதனால் இருபது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த நமீபிய அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டிபன் பார்ட் (22 பந்துகளில் 21 ரன்) மைக்கேல் வான் லிங்கென் (25 பந்துகளில் 25 ரன்) எடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்களால் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. 17.5ஆவது ஓவரில் கீரீன் (23 ரன்), 18.2 ஓவரில் ஜான் நிக்கொல் (ரன் எதுவும் எடுக்கவில்லை), 18.5 ஓவரில் க்ரௌக் வில்லியம்ஸ் (ரன் எதுவும் எடுக்கவில்லை) ஆட்டமிழந்ததால் நமீபிய அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 111 ரன் எடுத்து தோல்வியத் தழுவியது.
இந்தியா – ஸ்காட்லாந்து
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி, இந்தப் போட்டியில் முதன் முறையாக பூவாதலையா வென்றார். ஸ்காட்லாந்து அணியை மட்டையாடச் சொன்னார். உடனே இணையம் கொதித்து எழுந்தது. நெட் ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். கோலி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்து தவறு செய்துவிட்டார் என இரசிகர்கள் பொங்கினார். ஆனால் நடந்தது வேறு.
ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவரில் 85 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அஸ்வினைத் தவிர பிற பந்துவீச்சாளர்கள் மிக, மிகச் சிறப்பாக பந்துவீசினர். சிறப்பாக பந்து வீசாத அஸ்வின் 4 ஓவர் வீசி 29 ரன் கொடுத்து 1 விக்கட் வீழ்த்தினார். பும்ரா 3.4 ஓவர் வீசி 1 ரன் இல்லா ஓவர், 10 ரன் 2 விக்கட்டுகள்; வருண் சக்ரவர்த்தி 3 ஓவர், 15 ரன் விக்கட் இல்லை; ஷமி 3 ஓவர் ஒரு மெய்டன், 15 ரன் 3 விக்கட்; ஜதேஜா 4 ஓவர், 15 ரன் 3 விக்கட்.
அடுத்து இந்திய அணி வீரர்கள் ஆடவந்தனர். நெட் ரன்ரேட் அதிகமாக 86 ரன்களை 7.1 ஓவரில் எடுக்கவேண்டும். இந்திய அணி 6.3 ஓவரில் 89 ரன் எடுத்து இந்த இலக்கை எளிதாக எட்டியது. கே.எல். ராகுல் 19 பந்துகளில் 3 சிக்ஸ், 6 ஃபோர்களுடன் 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா 16 பந்துகளில், ஒரு சிக்ஸ், 5 ஃபோருடன் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த இரண்டாவது பந்தை சிக்சுக்கு அனுப்பி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
இபோது இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் 4 புள்ளிகளேடு மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நியூசிலாந்து 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்து, இந்தியா நமீபிய அணியைச் சந்திக்கிறது. இந்தப் போட்டியிலும் இந்தியா நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டும். நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியைச் சந்திக்கிறது. அந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து வென்றால் இந்திய அணிக்கு வாய்ப்பில்லை.