இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. போரினால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஓர் அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே; அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என்றார் அவர். இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்புகிறார். இறுதிக் கட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிக் கட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றார் அவர். போர் முடிந்த பிறகு எந்தத் தமிழ் அரசியல் தலைவரும் இனப் படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை என்று கூறும் அவர், இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை இலங்கை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்தார்.
Popular Categories



