ஐ.நா. அறிக்கை தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

Published:

amnesty-international புது தில்லி: ஐ.நா. அறிக்கை அவையில் தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகளின் மீதான அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு 6 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு ஆம்னெஸ்டி இன்டர்நேசனல்- இந்திய திட்ட இயக்குனர் ஷெமீர் பாபு விடுத்துள்ள அறிக்கையில்…. இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அறிக்கையால் தங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என பல காலமாக காத்திருந்து வந்துள்ளனர். கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதால் மேலும் பலமான அறிக்கை கிடைத்து, அதன்மூலம் தகுந்த நடவடிக்கையை எடுக்க புதிய இலங்கை அரசாங்கம் உறுதி மேற்கொண்டால் மட்டுமே தாமதிப்பது நியாயமானது. மேலும், போர்க் காலங்களில் நடைபெற்ற அத்துமீறல்களை இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஐ.நா.வுடன் இணைந்து ஆய்வுசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால், நீதி கிடைப்பதைத் தடுக்க நினைப்பவர்களால், சாட்சி கூற முன்வருபவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பை அளிக்கவும் அவ்வாறு செய்பவர்களைக் கண்டறியவும் மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். – என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img